சராசரி வாடிக்கையாளரின் வாழ்க்கைத்தரம் – கவிதை!

4 டிசம்பர்

ஏற்கெனவே நாம் கவிஞர் கடிவேலுவிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை இப்போது சொல்லிக்கொண்டு வருகிறோம் அல்லவா? சென்ற இடுகையில் கவிஞர் சொன்ன விஷயங்கள் நம்மை யோசிக்க வைத்தது என்று சொல்லி இருந்தோம். நமது வருமானத்தில் 70% பணத்தை நமக்குத் தேவையான 30% விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்காக யார் யாருக்கோ கொடுக்கிறோம் என்று சொன்னார். எவ்வளவு பெரிய நடைமுறை உண்மை இது. இதை யாராவது மாற்ற முடியுமா? ஏதாவது வழி இருக்கிறதா?

உண்மையில் அது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இன்னும் சொல்லப்போனால் ஒரு வகையில் அது  முடியாத காரியம்தான். ஏனென்றால் இந்த நடைமுறை என்பது பல காலமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயம். அதுவும் காலகாலமாக நடக்கும் விஷயம். அரசாங்கம் கூட இதை மாற்ற முற்படாது. அப்படியே வேறு ஒரு ஏற்பாடு செய்தாலும் அது வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. அதற்கு நமது உழவர் சந்தை ஒரு உதாரணம். அப்படியென்றால் இதற்கு மாற்றாக வேறு என்னதான் வழி? எந்த ஒரு நடைமுறைக்கும் மாற்று வழி என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், விஜய் டிவியில் கோபிநாத்தின் நீயா நானா? நிகழ்ச்சியில் பொருளாதார மேதைகளும், பொதுமக்களும் விலைவாசி ஏற்றமும், அதனால் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கமும் என்பது பற்றி விவாதம் நடத்தினார்கள். நாம்கூட அப்போது அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி ஒரு இடுகை வெளியிட்டிருந்தோம். அதை ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும் விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும்.

அதில் ஒருவர் பேசும்போது, ‘விலைவாசி ஏற்றத்தினால் பொதுமக்கள்தான் பாதிக்கப் படுகிறார்கள். வியாபாரிகள் பாதிக்கப் படுவதில்லை. ஏனென்றால் அந்த விலைவாசி உயர்வினால் ஏற்படும் விலை ஏற்றத்தை அவர்கள் மற்றவர்கள் தலையில் சுமத்தி விடுகிறார்கள்’ என்று சொன்னார். இன்னொருவர் பேசும்போது, ‘ஒரு விவசாயி, உற்பத்தியாகும் பொருளை என்ன விலைக்கு விற்கிறாரோ அதைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமான விலைக்குத்தான் வியாபாரிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அதற்குப் பதிலாக விவசாயியிடமே நேரடியாக கொள்முதல் செய்யும்போது அவருக்கும் நல்ல விலை கிடைக்கிறது. பொதுமக்களுக்கும் கடையில் வாங்குவதை விட குறைவான விலைக்குக் கிடைக்கும்’ என்று சொன்னார். நமது நாட்டிலும் அரசு உழவர் சந்தை என்ற ஒரு நடைமுறையை ஏற்படுத்தியது. ஆனால் அது நினைத்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

அதே கருத்து இப்போது பேசிக்கொண்டிருக்கும் விஷயத்துக்கும் பொருத்தமானதாக இருக்கும். நமக்குத் தேவையான பொருட்களை நாமே தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கும்போது நமக்கு குறைவான விலையில் நல்ல தரமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்து ஒரு பொருளை சந்தைப் படுத்தும் கம்பெனிகளுடன் போட்டி போட்டு ஒரு தயாரிப்பாளர் நேரடி விற்பனை மூலம் பொருட்களை சந்தைப் படுத்துவது எளிதான விஷயமாக இருக்காது. வலிமையான கம்பெனியாக இல்லாவிட்டால் நீண்ட நாட்களுக்கு அந்த முறையில் வியாபாரத்தை நடத்துவது முடியாத காரியமாகிவிடும்.

அப்படியென்றால் இதற்கு என்னதான் வழி?

கவிஞர் நம் சிந்தனையைக் கலைக்காமல் ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தார்.

“அப்படியென்றால் வாடிக்கையாளர்தான் மற்றவர்களை எல்லாம் வாழ வைக்கிறார். ஆனால் அவரோ கடைசிவரைக்கும் கஷ்டப்படும் கஸ்டமராகவே வாழ்க்கையைக் கழிக்கிறார் என்று சொல்கிறீரா?” என்று நாம் கேட்டவுடன் புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தி நம்மைப் பார்த்தார் கவிஞர்.

“ஆமாம், அதுதான் யதார்த்தமான உண்மை. இதோ இந்தக் கவிதையைப் படித்துப் பாரும்” என்று ஒரு காகிதத்தை நம்மிடம் கொடுத்தார். நாம் அதை வாங்கி பிரித்துப் படித்தோம்.

ஒரு வாடிக்கையாளரின் புலம்பல்

அன்றாடம் பொருள் வாங்கும்

அண்ணாச்சி கடை முன்னால்

புத்தம்புது பைக் ஒன்று

சத்தமின்றி வந்து நின்றது

நீண்டநாள் நண்பராய் பழகிய

அண்ணாச்சியிடம் நான் கேட்டேன்

“வண்டி புதுசா?”

என்னுடைய கேள்விக்கு

அண்ணாச்சி பதில் சொன்னார்

“பெட்ரோல் வில்லை ஏறிப்போச்சே

புதுவண்டி மைலேஜ் கொடுக்கும்”

நானறிந்து இதுவரைக்கும்

செதில்செதிலாய் பெயின்ட் உதிர்ந்த

பழைய சைக்கிள்தான் அவர்சொத்து

“புத்தம்புது கார் ஒன்றில்

மொத்தக்கடை முதலாளி

பவனிதான் வந்தாராம்

அண்ணாச்சி பார்த்தாராம்

அடுத்த இலக்கு அந்தக்காராம்”

நாள்முழுக்க ஆபீசில் வேலைசெய்து

நம்மால் முடிந்தது இந்த ஸ்கூட்டர்

அதுகூட எங்காச்சும் வழியிலே

ரிப்பேர் ஆகி நிற்குமோ?

பெட்ரோல் தீர்ந்து போகுமோ?

பயந்து பயந்து ஆபீசுக்கு

பயணிக்கிறேன் தினந்தோறும்

யாரிடமாவது சொல்லி வைத்து

பழைய ஸ்கூட்டர் விலைக்கு வந்தால்

எங்காவது பணம் புரட்டி

இதற்குப் பதில் வேறு ஸ்கூட்டர்

இன்னும் இரண்டு மாதத்தில்

எப்படியும் வாங்க வேணும்

படித்து முடித்ததும் ஒரு விஷயம் நமது புத்திக்கு உறைத்தது. அதாவது படித்து முடித்து மாதச் சம்பளத்துக்கு வேலை செய்து  ஆயுள் முழுக்க உழைத்தாலும் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவது சுலபமல்ல. ஆனால் ஏதோ ஒரு வியாபாரம் செய்ய முனைந்தால் நிச்சயமாக வாழ்க்கைத்தரம் மாறும் என்று தோன்றியது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: