உங்கள் வருமானம் எப்படி செலவாகிறது?

1 டிசம்பர்

சென்ற இடுகையில் பொருளாதாரத்தில் சுதந்திரம் அடைய விரும்பும் ஒருவர் எதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நாம் கேட்ட கேள்விக்கு, மனோபாவத்தை மாற்ற வேண்டும் என்று கவிஞர் கடிவேலு சொன்னது நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னது நமக்குப் புரியவில்லை. அதனால் நமது சந்தேகத்தை கவிஞரிடமே கேட்டோம்.

“கவிஞரே, வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறீரே, அது எப்படி என்று நீர் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்?” என்ற நமது கேள்விக்கு,

“காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு படுக்கச் செல்லும் வரை எத்தனையோ பொருட்களை நாம் உபயோகப் படுத்துகிறோம். அந்தப் பொருட்களையெல்லாம் ஏதோ ஒரு கடையில் பணம் கொடுத்துத்தானே வாங்குகிறோம்?” என்று கேட்டார்.

“இது எல்லோருக்கும் தெரிந்த சாதாரண விஷயம்தானே! நாம் எழுந்து பல் துலக்கி காபி குடிப்பதிலிருந்து, குளிக்க சோப்பு பயன்படுத்துவது, ஷாம்பு போடுவது, துணிகளை துவைப்பது, தலைக்கு எண்ணெய் தேய்ப்பது, முகத்துக்கு பவுடர் பூசுவது, சன் ஸ்கிரீன் போடுவது என்று எத்தனையோ பொருட்களை பயன்படுத்துகிறோம். அதனால் என்ன?” என்றோம்.

“சரியாகச் சொல்லி விட்டீர். இது போன்று நிறையப் பொருட்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். இவற்றையெல்லாம் கடையில்தான் வாங்குகிறோம். அது நமக்கு வரவா அல்லது செலவா?” என்று கேட்டார்.

“இது என்ன கேள்வி? இவற்றையெல்லாம் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம். அதனால் எல்லாமே செலவுதான். நம்முடைய மாத பட்ஜெட்டில் இவற்றுக்கென்று ஒரு தொகை கட்டாயம் ஒதுக்கத்தான் செய்கிறோம்” என்றோம்.

“அந்தப் பொருட்களைத் தரத்திற்காக வாங்குகிறீர்களா? அல்லது விலை குறைவாக இருப்பதனால் வாங்குகிறீர்களா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

“பொருட்கள் தரமானதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் விலையும் நமக்கு கட்டுபடியாகக்கூடிய அளவில் இருக்க வேண்டும்” என்றோம்.

“சரி, இந்த இந்த பிராண்டு உள்ள பொருட்கள் வேண்டும் என்று கேட்டு வாங்குவீர்களா? அல்லது கடைக்காரரிடம் எது நல்ல தரமான பொருள் என்று விசாரித்து வாங்குவீர்களா?” என்று கேட்டார்.

“ஏதாவது ஒரு பிராண்டு பெயரை சொல்லிதான் கேட்போம்” என்றேன்.

“அப்படி ஒரு பிராண்டு இருப்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று மறுபடி ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கவிஞரே, நீர் என்ன சொல்ல வருகிறீர். அதைச் சொல்லும்” என்றோம் நமக்கு உடனே விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்.

“சொல்கிறேன். அதற்கு முன்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும். அப்படி ஒரு பிராண்டு இருப்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்றார் மீண்டும்.

“விளம்பரங்களில் பார்க்கிறோமே. அதை வைத்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்” என்றோம்.

“ஆங், அதைத்தான் கேட்டேன். அந்த விளம்பரத்துக்கு யார் காசு கொடுக்கிறார்கள்?” என்றார். மறுபடியும் ஒரு கேள்வியா?.

“இதிலென்ன சந்தேகம், அந்தப் பொருளைத் தயார் பண்ணும் கம்பெனிதான் பணம் கொடுக்கும்” என்றோம்.

“அதுதான் இல்லை. அதற்கு நீர்தான் பணம் கொடுக்கிறீர்” என்றார்.

“என்னது, நான் பணம் கொடுக்கிறேனா?” என்றேன் ஆச்சரியமாக.

“ஆமாம், உம்மைப் போன்ற வாடிக்கையாளர்கள்தான் அந்தப் பணத்தைக் கொடுக்கிறார்கள்”

“அந்தப் பொருளில் இருக்கும் விலையைத்தானே கொடுக்கிறோம். அதிகமாக எதுவும் கொடுப்பதில்லையே” என்றேன் குழப்பமாக.

“அங்குதான் விஷயமே இருக்கிறது. மார்க்கெட்டுக்கு வரும் எந்தப் பொருளும், அதில் எழுதப்பட்டிருக்கும் உட்சபட்ச விலையில் தோராயமாக 30% சதவீத விலை மதிப்பில்தான் தயாரிக்கப் படுகிறது. ஆனால் கடைக்கு வரும்போது 100% சதவீத விலையில் விற்பனை செய்யப் படுகிறது. அதாவது 30% சதவீத விலை மதிப்புள்ள ஒரு பொருளுக்கு 70% சதவீதம் அதிகமாக விலை கொடுத்துத்தான் நாம் பொருட்களை வாங்குகிறோம்” என்றார்.

“அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் சொல்வது சரிதான் என்று எப்படி உறுதி செய்து கொள்வது?” என்று கேட்டோம்.

“சரி, நீர் பொருட்களை வாங்கும் கடையில், அந்த கடைக்காரர் லாபம் சம்பாதிப்பதற்காக அந்தக் கடையை நடத்துகிறாரா அல்லது சேவை மனப்பான்மையுடன் லாபமில்லாமல் நடத்துகிறாரா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

“லாபத்துக்காகத்தான் அந்தக் கடையை நடத்துகிறார். அவர் என்ன சேவையா செய்கிறார்? ஒவ்வொரு பொருளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் வைத்துத்தான் பொருட்களை விற்கிறார்” என்றோம்.

“கரெக்ட். அதாவது பத்து அல்லது பதினைந்து சதவீதம் லாபம் வைத்துத்தான் வியாபாரம் செய்கிறார். அதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படித்தான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த லாபத்தையும் நாம்தான் கொடுக்கிறோம்” என்றார்.

“இப்போது புரிகிறது. இதே போல் மொத்தக் கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட சதவீதம் லாபம் வைத்துத்தான் இவருக்கு பொருட்களைக் கொடுக்கிறார். ஏஜென்டுகளிடமிருந்து பொருட்களை வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிகமாகக் கொடுத்துத்தான் மொத்தக் கடைக்காரர் வாங்குகிறார். சரிதானே!” என்றோம்.

“ரொம்ப சரி, அப்படி ஒவ்வொருவராக பொருட்கள் கைமாறும் போது, அதன் விலை அதிகமாகிறது. அத்தோடு அப்படி ஒரு பொருள் மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது என்று பொதுமக்களுக்கு தெரிய வைப்பதற்காக பெரிய அளவில், நிறையப் பணம் செலவழித்து விளம்பரம் செய்யப் படுகிறது. அதற்காகும் செலவும் அந்த விலையில் தான் சேர்க்கப் படுகிறது. வாடிக்கையாளர்களாகிய நாம்தான் அதற்கும் சேர்த்து பணம் கொடுக்கிறோம்” என்றார் கவிஞர்.

அவர் சொல்வது உண்மைதான் என்றாலும் அதில் என்ன தவறு என்றுதான் நமக்குப் புரியவில்லை. எல்லோரும் வியாபாரம்தான் செய்கிறார்கள். அதில் ஒரு லாபம் சம்பாதிக்கிறார்கள். இது நடைமுறையில் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நேர்மையான தொழில்தானே. எதற்காக கவிஞர் இதைப் பற்றி பேசுகிறார் என்று புரியவில்லை.

“கவிஞரே, இது காலங்காலமாக நடக்கும் விஷயம்தானே, இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டோம்.

“தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாரும். நீர் கஷ்டப்பட்டு வேலை செய்து ஒரு வருமானம் சம்பாதிக்கிறீர். அதை செலவு செய்து உமக்குத் தேவையான பொருட்களை கடையில் வாங்குகிறீர். அப்படி வாங்குவதால் உமது வருமானத்தில் 70% சதவீதத்தை யார் யாருக்கோ கொடுக்கிறீர்கள். அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இது உமது வாழ்நாள் பூராவும் தொடர்கிறது” என்றார்.

அவர் கூறிய விஷயம் நம்மை யோசிக்க வைத்தது.

8 பதில்கள் to “உங்கள் வருமானம் எப்படி செலவாகிறது?”

  1. drpkandaswamyphd திசெம்பர் 1, 2012 இல் 1:27 பிப #

    வேறு வழியில்லையே, என்ன செய்ய?

    • rasippu திசெம்பர் 4, 2012 இல் 1:14 பிப #

      தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

  2. venkat திசெம்பர் 2, 2012 இல் 6:46 முப #

    Appo enna than pandrathu nama oru porula vanganumnaa 70% athigama koduromkireega appadinaa veera enna vali itha 70% kuraipatharkku 😦

    • rasippu திசெம்பர் 4, 2012 இல் 1:17 பிப #

      திரு வெங்கட் அவர்களே, தங்களது ஆவல் புரிகிறது. அடுத்தடுத்த இடுகைகளில் கவிஞர் கடிவேலுவிடமிருந்து இதற்கு ஏதாவது விடை கிடைக்கிறதா என்று பார்க்கலாம். தங்களது பின்னூட்டத்துக்கு நன்றி!

  3. புரட்சிதமிழன் திசெம்பர் 3, 2012 இல் 7:31 முப #

    நீங்கள் உணவு விடுதியில் 100 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு 10 ரூபாய் டிப்ஸ் கொடுப்பவராக இருந்தால் இந்த பதிவைப்பற்றி யோசிக்கத்தேவையில்லை. மற்றவர்கள் யோசிக்கலாம். முதலில் கண்ணில் தென்பட்டதெல்லாம் வாங்கும் பழக்கம் உள்ளவர்கள், அடுத்தவர் வாங்குகிறார் என்பதை பார்த்து அதை தானும் வாங்குபவர்கள் சிந்திக்கவேண்டும் இந்த பொருளை எதர்க்காக வாங்குகிறோம் இப்போது இந்த பொருள் அவசியம் தேவையா என பார்க்கவேண்டும்.

    • rasippu திசெம்பர் 4, 2012 இல் 1:20 பிப #

      புரட்சித்தமிழன் அவர்களின் கருத்தாழம் மிக்க பின்னூட்டத்துக்கு மிக்க நனறி!

  4. Pandian Govindarajan திசெம்பர் 3, 2012 இல் 8:53 முப #

    கவிஞர் கடியார் குறிப்பிடுவது இயல்பானதுதான்.பக்கத்திலிருக்கும் பனைமரத்தில் இறக்கும் கள்ளை வேண்டுமானால் இடைத்தரகர் இன்றி வாங்கமுடியுமே தவிற மற்றவை எல்லாவற்றையும் தொடர்ஓட்டத்தின் மூலமே பெறமுடியும்.அதனாலும் எண்ணற்றவர் வாழ்க்கைக்கு வழியேற்படுவதை கவனிக்க வேண்டும்.இன்றையதலைமுறை எதையும் இருந்த இடத்திலிருந்தே பெற நினைப்பதை கவனிக்க வேண்டும் அதுவேதான் உழவர் சந்தை தோல்வியுற்றதற்கு ஒரு காரணம்.விற்பனைக்கு வரும் எந்த பொருளும் பல படிகளை கடந்தே வரவேண்டும்.இடையிலே பலர் பொழைக்கிறார்கள் என்றாலும் தனியொருவன் எவனும் கோலோச்சுவதில்லை.

    • rasippu திசெம்பர் 4, 2012 இல் 1:35 பிப #

      திரு பாண்டியன் அவர்களே, தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நனறி! எத்தனையோ பேருக்கு வாழ்க்கையாக இருக்கும் இந்த நடைமுறையை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான பணம் அதில்தான் புழங்குகிறது என்பதும் உண்மை. எல்லோரும் இந்த நடைமுறையிலிருந்து மாறாவிட்டாலும், ஊக்கமும் விருப்பமும் கொண்ட எந்த தனியொரு மனிதனும் தன்னுடைய வருமானத்தை இதுபோல் பொருட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நடைமுறையில் இழப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால் அதை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே. அப்படி ஒரு முயற்சியில் வாழ்க்கைத்தரம் கூட உயர வாய்ப்பிருக்கிறதே.

புரட்சிதமிழன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி