நேரம்தான் பணம்! – பகுதி 4 (Time is Money! – Part 4)

27 செப்

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 3

நேரம்தான் பணம் என்பதை விளக்கிக்கொண்டு வந்த கவிஞர் கடிவேலு நான்கு வகைகளில் பணம் எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லி, அதில் நேரம் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், அதிகமான நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காக செலவிடும்போது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகிறது என்றும் சொன்னார். பிறகு, ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஒரு கேள்வியையும் கேட்டு, மிக முக்கியமான விஷயமாக அவர்கள் கனவு காண்கிறார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 3 (Time is Money! – Part 3)

நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

நேரம்தான் பணம்! – பகுதி 1 (Time is Money! – Part 1)

“கனவு காண்பதோடு நிற்பதில்லை வியாபாரம் ஆரம்பிப்பவர்கள். நாம் முந்தைய கவிதையில் சொன்னது போல் கனவில்லாத மனிதர்களை தங்களது கனவை நிறைவேற்றுவதற்காக வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்” என்றார்.

“அது எப்படி, கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்” என்றோம்.

“அவர்கள் தங்களது வியாபாரத்தை நடத்துவதற்கு, ஒவ்வொரு மட்டத்திலும் வெவ்வேறு வகையான திறமை கொண்ட ஆட்கள் தேவை. அதனால் அவர்கள் அதுபோல பல ஆட்களை மாதாமாதம் ஒரு சம்பளத்தை வரையறுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். தங்களது பணியை பல பகுதிகளாக பிரித்து அவர்கள் மூலமாக செய்து விடுகிறார்கள். இதனால் இருவருக்குமே நன்மை” என்றார்.

“அதாவது நம்பிக்கையான ஆட்கள் அவருக்கு கிடைக்கிறார்கள். அது போல் ஒரு நிலையான மாத வருமானம் வேலை செய்பவருக்கு கிடைக்கிறது. ஆனால் வியாபாரத்தில் ஏற்படும் லாபமோ, நஷ்டமோ வேலை செய்பவர்களை பாதிப்பதில்லை, சரிதானே” என்றோம்.

“மிகவும் சரி. ஏனென்றால் வியாபாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது முதலாளியின் விருப்பம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர் செய்வார். அந்த பொறுப்பு அவர் கையில்தான் இருக்கிறது” என்றார்.

“சரி, இதன் மூலம் நீர் சொல்ல வருவது என்ன?” என்றோம்.

“அதாவது நிறையப் பேரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அவர்களுடைய நேரத்தை அவர் விலைக்கு வாங்கி விடுகிறார் அல்லவா?” என்றார்.

“ஆமாம், ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் கொடுத்த வேலையை செய்ய வேண்டும் என்பதுதானே அதன் அர்த்தம்” என்றோம்.

“உதாரணமாக ஒருவர் தன்னுடைய வியாபாரத்திற்காக 50 பேரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் தினசரி குறைந்தது 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அவருக்கு தினமும் 400 மணி வேலை நேரம் கிடைக்கிறதல்லவா?” என்றார்.

“ஓஹோ! இதைத்தான் நேரத்தை பலமடங்காக பெருக்குவது என்கிறீரா?” என்றோம். நமக்கு இப்போது ஓரளவு புரிய தொடங்கி விட்டது.

“அதாவது பத்து பேர் சேர்ந்து ஒரு வேலையை பத்து நாளில் செய்தால், அதே வேலையை இருபது பேர் சேர்ந்து எத்தனை நாளில் செய்வார்கள்?” என்று கேட்டார் கவிஞர்.

“ஐந்து நாளில் செய்வார்கள். இது பள்ளியில் படித்த கணக்குப் பாடமாயிற்றே” என்றோம்.

“அதேதான். அதுதான் இங்கும் நடக்கிறது. மேலும் எந்த ஒரு செயலிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றால் அதற்காக 10000 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். அதாவது சரியான நேரத்தில் சரியான விஷயத்தை செய்ய அதில் 10000 மணி நேரம் அனுபவம் இருக்க வேண்டும். இதையே Practice makes perfect என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்பொழுதுதான் அதில் நினைத்தபடி வெற்றியடைய முடியும். இதைத்தான் தன்னுடைய புத்தகத்தில் ராபர்ட் கியோஸாகி சொல்கிறார்” என்றார்.

நமக்கு இந்த கருத்து புதுமையானதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் மிகவும் பயனுள்ளது என்பதும் புரிந்தது.

கவிஞரே தொடர்ந்து, “ஒரு சின்ன கணக்குப் போட்டு பாரும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்பவர் ஒரு மாதத்தில் 25 நாட்களில் 200 மணி நேரம் வேலை செய்கிறார். அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு 2400 மணி நேரம். ஆக அவர் 10000 மணி நேரம் வேலை செய்ய சுமாராக ஐந்து வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். இதையே மால்கம் கிளாட்வெல் என்பவரும் 8765 மணி நேரம் கொண்ட ஒரு வருடத்தில் முழு நேர வேலைக்குச் செல்லும் ஒரு நபர் சராசரியாக 2080 மணி நேரம் வேலை செய்கிறார் என்று வரையறுக்கிறார்” என்றார்.

“ஆக வேலைக்குச் செல்பவருக்கு மட்டுமல்ல, வேலை கொடுப்பவருக்கும் அனுபவம் அதிகமாகிறது. வேலைக்குச் செல்பவர் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டு சரியாக செய்ய ஆரம்பிக்கும் போது ஐந்து ஆண்டுகள் ஓடி விடுகிறது. ஆனால் வேலை கொடுப்பவர் அதை முன்பே கற்றுக் கொண்டு விடுகிறார்” என்றோம்.

“ஆமாம், ஆனால் அந்த ஐந்து வருடங்களில் எல்லாமே மாறி விடுகிறது. பிறகு மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த 10000 மணி நேரத்தை அதற்கு முன்பே நீங்கள் பெற்று விட்டால், அப்போது காலத்தை ஜெயிப்பதாக ஆகிவிடும் அல்லவா?” என்றார். நமக்கு ஏதோ ஒரு விஷயம் தெளிவாவது போல் தோன்றியது.

“அதாவது நீங்கள் நேரத்தை பல மடங்காக பெருக்கும்போது இந்த 10000 மணி நேர அனுபவத்தை குறுகிய காலத்திலேயே அதாவது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களிலேயே பெற்றுவிடலாம். சரிதானே!” என்றோம்.

தலையை ஆட்டி ஆமோதித்தார் கவிஞர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: