நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

20 செப்

நான்கு வழிகளில் பணம் எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்றும் அதில் நேரம் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கவிஞர் கடிவேலு விளக்கினாரல்லவா? இதன் மூலம் நேரம்தான் பணம் என்பதை புரிந்து கொண்டோம். எந்த அளவுக்கு நேரத்தை பிரயோஜனமாகப் பயன்படுத்துகிறோமோ அதைப்பொருத்து நமது வருமானம் அதிகமாகும் என்பதும் புரிந்தது.

நேரம்தான் பணம்! (Time is Money) முந்தைய இடுக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்.

“கவிஞரே, நேரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அதை வீணடிக்காமல் சரியான விதத்தில் பயன்படுத்தினால் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்றும் புரிந்து கொண்டோம்” என்றோம். அதை ஆமோதித்த கவிஞர்,

“ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் நேரம் என்பது மாற்ற முடியாத மேற்கூரை கொண்டது. அதாவது ஒருநாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் என்பதை யாரும் மாற்றமுடியாது. அந்த நேரத்துக்குள்தான் நாம் நம்முடைய அன்றாட வேலைகளையும் (சாப்பிடுவது, குளிப்பது, பிரயாணம், தூக்கம், டிவி பார்த்தல், அரட்டை அடித்தல், ஷாப்பிங் போவது போன்ற வேலைகளையும்) மற்ற அத்தியாவசிய வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றில் எந்த வேலைகளைக் குறைத்து, அந்த நேரத்தை வருமானத்திற்கு பயன்படுத்த முடியும்?” என்று கேட்டார். நமக்கு பதில் தெரியாததால் அமைதியாக இருந்தோம். கவிஞரே தொடர்ந்தார்.

“மாத சம்பளத்திற்கு வேலை செய்பவரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து மணி நேரம் வேலை செய்து ஒரு வருமானம் ஈட்டுகிறார். அவர் அந்த வருமானத்தை அதிகப்படுத்த  வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இன்னும் ஒரு எட்டு மணி நேரம் வேலை செய்ய முடியுமா? ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் வேலை செய்தால் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரம் செலவழிக்க முடியுமா? உடம்புதான் என்ன ஆகும்?. ஆனால் சிலர், சில சமயங்களில் ஓவர்டைம் செய்து வருமானம் ஈட்டுவதுண்டு. ஆனால் அதுவே தினசரி வாழ்க்கையாக முடியுமா என்ன?” என்று கேட்டார்.

“தினசரி ஓவர்டைம் கிடைக்காதே, அப்படியே கிடைத்தாலும் தினமும் திறமையாக பணி செய்ய முடியாமா?” என்றோம். நாம் முடிக்கும் முன்பே,

“அதனால்தான் சிலர் புத்திசாலித்தனமாக, படித்து வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இரட்டை வருமானம் கிடைக்கிறது. ஆனால் குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதான பிறகு வருமானம் அதிகமாக தேவைப்படுகிறது. குடும்பத்தலைவி வேலைக்குச் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகளையும், குடும்பத்தை சரிவர கவனிக்க முடிவதில்லை.” என்றார் கவிஞர். தொடர்ந்து,

“சரி, சொந்த தொழில் செய்பவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களும் தங்கள் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால், அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அல்லது உதவிக்கு ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிறகு அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், நிர்வகிக்க வேண்டும் என்பதால் அதிக நேரம் அலுவலகத்திலேயே இருக்க வேண்டியிருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை. இதனாலும் சிக்கல் ஏற்படுகிறது” என்றார்.

“நீர் சொல்வதைப் பார்த்தால் எல்லாம் பிரச்சினையாகவே இருக்கிறதே, பிறகு என்னதான் செய்வது?” என்று கேட்டோம். அதற்கு, “கொஞ்சம் பொறும். இன்னும் சில விஷயங்களையும் பார்ப்போம். வியாபாரம் செய்பவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால் மேலும் அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. பிறகு அதிக நேரம் வேலை செய்து அதை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அதிகப்பணம் சம்பளமாகக் கொடுத்து நிர்வாகிகளையும், வேலையாட்களையும் வேலைக்கு வைக்க வேண்டியிருக்கிறது. அதிகப்பணம் முதலீடு செய்வதால் நஷ்டமாகாமல் தவிர்க்க மிகவும் எச்சரிக்கையாக வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இதே போல்தான் முதலீடு செய்பவர்களும். அதிகமான பணத்தை முதலீடு செய்தால்தான் வருமானத்தை அதிகப்படுத்த முடியும். அதனால் ரிஸ்க்கும் அதிகம்” என்றார்.

“வேலையில் இருப்பவர்களுக்கு நஷ்டம் என்ற ரிஸ்க் இல்லை. அவர்களுக்கு பணம் குறைவாக இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் செலவழிக்க நேரம் இருக்கும். ஆனால் பணத்தை முதலீடு செய்து சொந்த தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் நிறைய பணம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் செலவழிக்க நேரம் இருக்காது. நாம் சொல்வது சரிதானே?” என்றோம்.

“ரொம்பவும் சரி! அத்தோடு பணத்தை முதலீடு செய்பவர்களுக்கும் இதே நிலைதான். குடும்பத்தில் இருப்பவர்களுடன் செலவழிக்க நேரம் கிடைத்தாலும், எப்போதும் டென்சனும் அதிகமாகவே இருக்கும். முதலீட்டுக்கு தகுந்த லாபம் வர வேண்டுமல்லவா” என்றார்.

“எல்லாம் சரிதான், ஆனால் நீர் நேரத்தை பலமடங்காக பெருக்குவது எப்படி? என்றுதானே சொல்லத்தானே ஆரம்பித்தீர். அதற்கு என்ன செய்வது? அதை தெரிந்து கொள்ளத்தான் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றோம். நாம் கேட்டது சரிதானே?

“சொல்கிறேன். அதற்கு முன்னால், நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும்” என்று வழக்கம் போல ஆரம்பித்தார்.

“என்ன கேட்கப் போகிறீர்?, கேளும்! தெரிந்தால் சொல்கிறோம்” என்றோம்.

“ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார் கவிஞர்.

ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? யோசித்தோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: