இயற்கையின் விதி என்றும் மாறாதது!

13 செப்

நல்ல நேரம் கிடைக்க ஆசீர்வாதம் தேவை! (தொடர்ச்சி)

கவிஞர் கடிவேலு நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்று சொல்லிக் கொண்டு வரும்போது சுவையான ஒரு கதையை சொன்னாரல்லவா? நமக்கு நல்ல நேரம் வாய்க்க மற்றவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

“நீர் சொல்வது நமக்குப் புரிகிறது” என்று சொன்னோம்.

“அப்படியானால் உமக்கு ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம்” என்றார். அத்தோடு, “எம்பெருமான் பரமசிவனும் அன்னை பார்வதியும் உரையாடியதாக சொன்ன கதையின் மூலம் இன்னொரு விஷயமும் நமக்கு புரிகிறது” என்றார்.

“அது என்ன?” என்று கேட்டோம்.

“இயற்கையின் விதியை மாற்ற முடியாது என்பதுதான்” என்றார் கவிஞர்.

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்” என்றோம் ஆர்வமாக.

“ஒருவனுடைய பாவபுண்ணியத்திற்கான பலனை அவன் கண்டிப்பாக அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று பார்த்தோம் அல்லவா? அது போல எதையும் முறைப்படி செய்தால் அதற்குரிய பலன் கட்டாயம் வந்தே தீரும். இது தான் இயற்கையின் விதி” என்றார்.

“அதாவது புவியீர்ப்பு விசை (Gravity) போலவா?” என்றோம்.

“ஆமாம், புவியீர்ப்பு விசை என்பது ஒரு இயற்கையின் விதி. அது எல்லோருக்கும் பொதுவானது. யார் ஒரு பொருளை மேலே தூக்கிப் போட்டாலும் அது கீழே விழுந்துதான் ஆகவேண்டும். அது போல் நல்லவனோ கெட்டவனோ யார் சூடு பண்ணினாலும் தண்ணீர் 100 டிகிரி செல்சியஸில் ஆவியாகித்தான் ஆக வேண்டும். இந்த விதி எப்பொழுதும் மாறாவே மாறாது” என்று சொல்லிவிட்டு

கட்டையோ குட்டையோ கருப்போ சிவப்போ

பட்டையோ சட்டையோ புத்தியோ – மட்டையோ

யார்எறிந் தாலும்அது மேலேசென்றால் பூமிவரும்

யார்எரித் தாலும்தண் ணீர்கொதித்தால் ஆவிவரும்

என்று ஒரு கவிதையையும் சொன்னார். நமக்கு ஆச்சரியமாக இருந்தது.

“கவிஞரே, எப்படி உடனுக்குடன் எதுகை மோனையுடன் கவிதை புனைகிறீர்?” என்றோம்.

“நாம் ஒரு விஷயத்தில் நுணுக்கமாக கவனம் செலுத்தும் போது எல்லாம் தானாகவே உருவாகி வரும்” என்றார் மிகவும் சாதாரணமாக.

“ஆமாம், அந்தக் கவிதையில் பட்டையோ சட்டையோ என்று சொல்லியிருக்கிறீரே, அப்படியென்றால் என்ன அர்த்தம்?’ என்றோம்.

“கடவுள் இருக்கிறார் என்று உறுதியாக நம்பி, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு, உடம்பில் திருநீறை பட்டையாக பூசிக்கொள்ளும் பக்திமான்களையும், கடவுள் இல்லையென்று வாதிடும் கருப்புச் சட்டைக்காரர்களையும் அது குறிக்கிறது” என்றார்.

அவர் சொன்ன கவிதையில் மட்டை என்ற வார்த்தையை முட்டாள் என்று குறிப்பதற்கும், மேலே தூக்கிப்போடும் பொருளாகவும், எரிக்கும் பொருளாகவும் அர்த்தம் வரும்படி பயன்படுத்தியிருப்பதை இரசித்தோம்.

பிறகு “அதாவது கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களுக்கும், இல்லை என்று சொல்பவர்களுக்கும் இயற்கையின் விதி ஒன்றுதான் என்கிறீர். அப்படித்தானே?” என்றோம்.

“ஆமாம், கடவுள் எல்லோருக்கும் ஒரே விதமான ஆற்றலை அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறார். அதை அவரவர்கள் தங்களுடைய மனப்பான்மைக்கும், அறிவுத்திறனுக்கும் தகுந்தாற்போலும், பூர்வபுண்ணியத்துக்கு ஏற்றார் போலவும் பயன்படுத்தி தங்களுக்கு வாழ்வோ தாழ்வோ ஏற்படுத்திக் கொள்கிறார்கள்” என்றார். தொடர்ந்து, “பதினாறு கவனகர் ஐயா அவர்கள் அந்த இறையாற்றலை நாம் எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் மின்சாரத்துக்கு ஒப்பிடுவார்.

அதாவது ‘நாம் பயன்படுத்தும் மின்சக்தி ஒன்றுதான். ஆனால் அது எந்த உபகரணத்தில் பயன்படுத்தப் படுகிறதோ அதற்கேற்றவாறு அதன் பயன்பாடு மாறுகிறது. மின்விசிறிக்குள் செல்லும்போது அது சுற்றுகிறது. பல்புக்குள் செல்லும்போது அது ஒளிர்கிறது. குளிர்சாதனப் பெட்டிக்குள் செல்லும்போது குளிர்ச்சியைக் கொடுக்கிறது. இஸ்திரிப் பெட்டிக்குள் சென்றால் உஷ்ணத்தை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சென்று ஒலி ஒளிக்காட்சியாக மாறுகிறது. வானொலிப்பெட்டியில் பாடலாக சத்தமிடுகிறது என்று கூறுவார்” என்றார்.

“அதாவது அந்த இறையாற்றலை ஈர்த்துக் கொள்ளும் விதமாக நாம் எவ்வாறு நம் மனத்தை தயார் செய்கிறோமோ, அது போல் நமது வாழ்க்கை அமைகிறது, சரிதானே!” என்றோம்.

“மிகவும் சரியாக சொல்லிவிட்டீர். நாம் என்னவாக ஆக வேண்டுமென்று நினைக்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் நம்மை நாமே டிசைன் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நாம் இறையாற்றலை சரியான விதத்தில் பயன்படுத்தி எதையும் சாதிக்க முடியும்” என்றார் கவிஞர்.

“கவிஞரே, நாம் நமது தலைப்பை விட்டு வேறு திசையில் சென்று விட்டோம் என்று நினைக்கிறேன்” என்றேன் திடீரென நினைவு வந்தவனாக.

“இல்லை, இதுவும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான். இந்த மாறாத இயற்கையின் விதியை, நேரத்தை பல மடங்காக பெருக்கவும் பயன்படுத்துவோம். சரி, இப்போது நேரத்தின் அருமையைப் பற்றி பேசுவோம். நேரம்தான் பணம் என்பது உமக்குத் தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்டார்.

“கேள்விப்பட்டிருக்கிறோம். நீர் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்” என்றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: