நல்ல நேரம் கிடைக்க ஆசீர்வாதம் தேவை!

12 செப்

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 2

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்று சொல்ல ஆரம்பித்த கவிஞர் கடிவேலு, நம்முடைய வாழ்க்கைத் தரம், நாம் எப்படி நேரத்தை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தும், நாம் எடுக்கும் சில முடிவுகளின் அடிப்படையிலும்தான் அமைகிறது என்று சொன்னார் அல்லவா? பிறகு ஒரு கதை சொல்லடுமா? என்று கேட்டு கதை சொல்ல ஆரம்பித்தார்.

“இது நான் கேள்விப்பட்ட ஒரு புராணக்கதை. நீரும் கூட கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சமயம் கைலாயத்தில் பரமசிவனும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்களாம். பார்வதி அன்னை கருணையே உருவானவள் அல்லவா? பக்தர்கள் மீது கருணையுள்ளம் கொண்டு அவர்களின் துன்பங்களைப் போக்க எண்ணுபவள்.

பரமசிவனிடம் அன்னை பார்வதி கேட்கிறாள், ‘ஒரு சிலர் ஏழையாகப் பிறந்தாலும், நாளடைவில் பணக்காரர்களாகி நன்றாக வாழ்கிறார்கள். ஆனால் வேறு சிலர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களால் முன்னேற முடிவதில்லையே. கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்க்கையைக் கழிக்கிறார்களே, இதற்கு காரணம் என்ன?’ என்று கேட்கிறாள்.

அதற்கு பரமசிவன், ‘முந்தைய பிறவியில் அவரவர்கள் பண்ணிய பாவ புண்ணியத்தின் பலனை இந்த பிறவியில் அனுபவிக்கிறார்கள். அதற்குத் தகுந்தபடி இந்தப் பிறவியில் ஏழைக்குடும்பத்திலோ, பணக்காரரின் வீட்டிலோ பிறக்கிறார்கள். பிறகு இந்தப் பிறவியில் பண்ணும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவும் வாழ்க்கை மாறுகிறது” என்கிறார்.

“அது எப்படி?” என்று அன்னை பார்வதி கேட்க, “மற்றவருக்கு கேட்காமலே உதவி செய்த புண்ணியத்தை பெற்றவன் இந்தப் பிறவியில் வசதியான குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்படாமல் வாழ்கிறான். பிறர் உதவி செய்யும்படி கேட்டுக் கொண்ட பிறகு அந்த உதவியைச் செய்பவன் இந்தப் பிறவியில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்தாலும், தன்னுடைய முயற்சியினால் முன்னேறி நல்ல வாழ்க்கையை வாழும் பேறு பெறுகிறான். ஆனால் மற்றவர் உதவி கேட்டும் செய்யாதவன் இந்த பிறவியில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் முன்னேற முடியாமல் கடைசிவரை கஷ்டத்திலேயே வாழ்க்கையைக் கழிக்கிறான்’ என்று சொல்கிறார் இறைவன்.

உடனே பார்வதிதேவி, ‘கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தும் ஒருவன், இந்தப் பிறவியில் நல்லது பண்ணி மற்றவர்களுக்கு உதவி செய்து, அதனால் ஏற்படும் புண்ணியத்தின் காரணமாக கஷ்டங்கள் தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ முடியாதா?” என்று கேட்கிறாள்.

அதற்கு பரமசிவன் பதில் சொல்கிறார், “அதற்கும் அவன் முந்தைய பிறப்பில் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் அப்படி ஒரு சூழ்நிலை அவனுக்கு அமையும். அப்படி அமைந்தால்தான் அவனுடைய கஷ்டங்கள் தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ முடியும்” என்கிறார்.

“அவனுடைய முன்வினைப் பயன்தான் காரணம் என்று சொல்கிறீர்கள். ஒருவன் நம்மைத் துதித்து வேண்டிக்கொண்டால், அப்போது நம்மால் அவனுடைய தலையெழுத்தை மாற்ற முடியுமல்லவா?” என்று கேட்கிறாள் கருணையே வடிவான அன்னை பார்வதி. ஆனால் எம்பெருமான் சிரித்துக் கொண்டே, “ஒருவனுடைய வினைப்பயன் தீரும்வரை யார் நினைத்தாலும் அவனுடைய விதியை மாற்ற முடியாது. அவனுடைய வினைக்கான பலனை அவன் அனுபவித்தேதான் ஆக வேண்டும்” என்கிறார்.

“நம்மால் கூட ஒருவனது தலையெழுத்தை மாற்ற முடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாம் நினைத்தால் நிச்சயம் முடியும். இதோ இந்த பக்தன் தினமும் என்னை நினைத்து தவறாமல் பூஜை செய்கிறான். இருந்தாலும் தன்னுடைய கஷ்டம் தீர வழி தெரியாமல் தவிக்கிறான். அவன் படும் அவஸ்தையை பார்க்க சகிக்க முடியவில்லை. அருள்கூர்ந்து அவனுடைய கஷ்டத்தை தீர்க்க வழி செய்யுங்கள்” என்று பரமசிவனிடம் மன்றாடுகிறாள்.

அதற்கு இறைவன் “அவனுக்கு இன்னும் நேரம் வரவில்லை. அது வரை அவன் கஷ்டப் பட்டுத்தான் ஆகவேண்டும். யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது” என்று சொல்கிறார்.

உடனே கோபம் கொண்ட அன்னை பார்வதி, “என்னால் கூட முடியாதா? நான் நடத்திக் காட்டுகிறேன் பாருங்கள். இதோ என்னுடைய சக்தியினால் அவனுடைய கஷ்டத்தைப் போக்குகிறேன்” என்று சொல்லி சபதமிட்டு விட்டு, ஒரு சாக்குப்பை நிறைய பணத்தை நிரப்பி, அவன் நடந்து போகும் பாதையில் போட்டு விடுகிறாள்.

அந்த மனிதன் நடந்து வந்து கொண்டிருக்கிறான். இன்னும் கொஞ்ச தூரம்தான். அந்த பணம் நிறைந்த சாக்குப்பை கிடக்கும் இடத்துக்கு வந்து விடுவான். அதைப் பார்த்து விட்டான் என்றால் அத்தோடு அவனுடைய கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும். ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் அன்னை பார்வதி.

அந்த நேரத்தில்தான் விதி விளையாடுகிறது. அவனுக்கு முன்னால் நான்கு குருடர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நடந்து வருகிறார்கள். அதைப் பார்த்த அந்த பக்தன் மனதில் ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ‘கண் தெரியும் நாமே நடந்து போகும்போது எதிலாவது இடறிக்கொள்கிறோம். பாவம் கண் தெரியாமல் இவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுவார்கள்’ என்று நினைத்துப் பார்க்கிறான். கண்ணை மூடிக்கொண்டு அவர்களைப் போல் நடந்து பார்க்க முயற்சிக்கிறான். கொஞ்ச தூரம் வரை அப்படியே நடந்து செல்கிறான்.

அதனால் அந்த பணம் நிறைந்த சாக்குப்பையைத் தாண்டிச் சென்று விடுகிறான். இதைப் பார்த்த பரமசிவன் சிரிக்கிறார்” என்று கதையை முடித்தார் கவிஞர் வடிவேலு. அற்புதமான கதை. சுவையாக கதை சொல்வதற்கு கவிஞருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

“இந்தக் கதையின் மூலம் நீர் சொல்ல வருவது என்ன?” என்றோம்.

“இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், தெய்வமே முயன்று ஒருவனுக்கு நல்லது பண்ண நினைத்தாலும் அவனுக்கு நேரம் சரியில்லை என்றால் எதுவும் நடக்காது, அவனுடைய கஷ்டம் தீராது. அத்தோடு மற்றவருக்கு உதவி செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம், அதுவும் மற்றவர்கள் கேட்காமலே அவர்கள் கஷ்டத்தைத் தீர்ப்பவன் எவ்வளவு புண்ணியத்தை சம்பாதிக்கிறான் என்பதும் இதிலிருந்து புரிகிறதல்லவா?” என்றார் கவிஞர்.

“அதாவது நல்ல நேரம் உமக்கு வர வேண்டுமென்றால், நீர் நிறைய புண்ணியம் சேர்த்து இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடைய மனப்பூர்வமான ஆசீர்வாதத்தையும், வாழ்த்துக்களையும் பெற வேண்டும். அப்படி பெற்ற ஆசிகள் உமக்கு நல்ல வாழ்க்கை அமைய தேவையான வாய்ப்புக்களை உருவாக்கித் தரும்” என்றார்.

தொடர்ந்து, “Giving is Living என்று சொல்வார்கள். அதாவது கொடுப்பதுதான் வாழ்வின் சாராம்சம். நம்மால் என்ன முடியுமோ, அதை மற்றவர்களுக்கு தர வேண்டும். எந்த வகையிலான உதவியாக இருந்தாலும் சரி! அதனால் புண்ணியம் கிட்டும். அத்தோடு மற்றவர்களின் ஆசியும் கிடைக்கும். உங்களுக்கு நிறைய ஆசிகளும், ஆசீர்வாதங்களும் கிடைத்தால் இறைவனின் ஆசீர்வாதமும் கிடைக்கும். அதுதான் நல்ல நேரம். நீங்கள் ஒரு அடி நடந்தால் கடவுள் உங்களை பத்து அடி முன்னோக்கி நகர்த்துவார்.

இது ஏதோ மூடநம்பிக்கையினால் சொல்லப்படும் விஷயமல்ல. இதை சரியான வகையில் புரிந்து கொள்ளவும் பெரியவர்களின் ஆசி பெற்றிருக்க வேண்டும்” என்றார் கவிஞர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: