நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்வோம்!

11 செப்

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 1

இது நமது ஐம்பதாவது பதிவு. நமக்கு உற்சாகம் அளித்த நண்பர்களுக்கும், இதுவரை வந்த பதிவுகளைப் படித்து வந்த எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கும் நேரமிது. நமது கருத்துக்களும், எழுத்துக்களும் பிடித்திருந்தால் உங்களது பொன்னான நேரத்தில் சிறிதளவு ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யவும். அது நம்மை மேலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். குறை எதுவும் இருந்தாலும் சுட்டிக் காட்டலாம். அவை அடுத்து வரும் பதிவுகளில் வராமல் பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி!

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்று சொல்ல வந்த கவிஞர் கடிவேலுவை, பல்வேறு விவகாரங்கள் அவரை வேறு திசையில் செலுத்திக் கொண்டு சென்று விட்டதால் இது வரை அந்த விஷயத்தைச் சொல்லாமல் இழுத்தடித்து விட்டார். இதற்கு மேலும் நம்மால் பொறுக்க இயலாது. எனவே இம்முறை அவரை விட்டு விடாமல் விஷயத்தை எப்படியாவது பெற்று விடலாம் என்று தீர்மானித்து விட்டோம்.

அதற்காகவே காலையில் நாம் கண்ட கனவிலிருந்து விழித்து எழுந்தவுடன், நமது தினசரி செயல்களை எல்லாம் சீக்கிரமே முடித்து விட்டு, ஆபீஸுக்கு கிளம்பி விட்டோம். ஞாபகமாக கிளம்பும் போதே கவிஞருக்கு போன் செய்து வரவும் சொல்லி விட்டோம்.

ஒரு வழியாக கவிஞர் கடிவேலு நம்மிடம் வந்து சேர்ந்தார். வந்தவுடன் கைகுலுக்கும் சாக்கில் அவரை செல்லமாக (லேசாகத்தான்) கிள்ளினோம். ஆ! என்று கத்தினார்.

“ஏன் என்னைக் கிள்ளுகிறீர்? நான் என்ன தவறு செய்தேன்?” என்றார். நீர் இதுவரை நம்மை காக்க வைத்ததற்கு உமக்கு ஒரு சிறிய தண்டனை. அது மட்டுமில்லாமல் இப்போது நீர் வந்திருப்பது நிஜம்தானா என்று உறுதிப் படுத்திக் கொள்ளவும்தான்” என்றேன்.

“நான் வந்திருப்பது நிஜம்தானே? அதைக் கிள்ளிப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?” என்றார். “நேற்று நீர் வந்தது போல கனவு கண்டேன். அதனால்தான் இப்போது உம்மை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்” என்றேன். பிறகு, “சரி! இனிமேலும் காத்திருக்க நமக்கு பொறுமை இல்லை. நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? உடனே சொல்லும்” என்றேன். நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு ஆரம்பித்தார்.

“இது ஒரு முக்கியமான விஷயம். அதனால் ஒவ்வொன்றாக சொல்கிறேன். ரொம்ப நேரம்கூட ஆகலாம். அதனால் கொஞ்சம் பொறுமையுடன் இருக்க வேண்டியது இருக்கும். உமக்கு போரடிப்பது போல் இருந்தால் ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேளும். நான் புரிந்து கொண்டு நிறுத்திக் கொள்கிறேன்” என்று பெரிதாக பீடிகை போட்டார்.

“எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை, நாம் கேட்க தயாராக இருக்கிறோம்” என்றோம்.

ஒரு முக்கிய விஷயம். இந்த தலைப்பில் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாக கவிஞர் சொல்லியிருப்பதால் நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்ற தலைப்பை பல பகுதிகளாக பிரித்து வலைப்பூவில் பதிவு செய்ய இருக்கிறோம். அவர் குறிப்பாக உணர்த்தியது போல்

நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்வோம்

நல்ல நேரம் கிடைக்க ஆசீர்வாதம் தேவை

நேரம்தான் பணம்

எல்லாமே நெட்வொர்க்தான்

போன்று பல இடுகைகளாக வர இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

“சரி, நேரம் என்றவுடன் உமது ஞாபத்துக்கு வரும் விஷயங்கள் என்னென்ன?” என்று ஆரம்பித்த உடனேயே ஒரு கேள்வியை கேட்டார்.

“நேரம் என்றால், கடிகாரம் (முக்கியமாக அலாரம் டைம்பீஸ்), அலுவலக வேலை நேரம், இரயில் மற்றும் விமான பயணம் (புறப்படும், சேரும் நேரம்), சாப்பிடும் நேரம், நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதகம், மின்சாரம் கட்டாகி வரும் நேரம், தவணை கட்ட வேண்டிய தேதி, குழந்தை பிறக்கும் நேரம், அதிர்ஷ்டம், இன்னும் இது போன்ற விஷயங்கள்தான்” என்றோம்.

“அத்தோடு வாழ்க்கைத்தரத்தையும் சேர்த்துக் கொள்ளும்” என்றார். தொடர்ந்து, “அதாவது ஏதாவது ஒரு காரணத்தினால் நீங்கள் வருமானத்திற்காக இப்போது செய்யும் வேலையையோ, தொழிலையோ தொடர்ந்து செய்ய முடியாமல் போனால், இப்போதுள்ள உங்களுடைய இதே வாழ்க்கைத்தரத்தை எவ்வளவு நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு கடைப்பிடிக்க முடியும்? அதுதான் உங்கள் வாழ்க்கையின் மதிப்பு என்று ராபர்ட் கியோஸாகி அவர்கள் சொல்கிறார்” என்றார் கவிஞர். நமக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்த விஷயத்தை இது போல நாம் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லையே!

மேலும் தொடர்ந்த கவிஞர், “ஒரு விஷயத்தைக் கவனித்தால் சில உண்மைகள் புரியும். அதாவது நேரம் என்பது எல்லோருக்கும் ஒரே அளவில்தான் கிடைக்கிறது அல்லவா? ஆனால் இந்த நேரத்தை ஒவ்வொருவரும் எப்படி பயன்படுத்துகிறார்களோ, அதைப்பொருத்தே அவர்கள் வாழ்க்கைத்தரம் அமைகிறது” என்றார். “ஆமாம், நீர் சொல்வது உண்மைதான்” என்றோம்.

“சிலர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாகவே இறக்கிறார்கள். ஒரு சிலர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, பிறகு நிறையப் பணம் சம்பாதித்து பணக்காரர்களாக ஆகி வாழ்வை முடிக்கிறார்கள். வேறு சிலரோ ஒரு சிலர் ஏழையாகப் பிறந்து, பணக்காரர்களாக வாழ்ந்து, மீண்டும் ஏழையாகி அப்படியே இறக்கும் வரை வாழ்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து அவரே, “இன்னொரு பக்கம் சிலர் பணக்காரர்களாகப் பிறந்து, பணக்காரர்களாக வாழ்ந்து, பணக்காரர்களாகவே வாழ்கிறார்கள். வேறு சிலரோ பணக்காரர்களாகப் பிறந்து, ஏழையாகி கஷ்டப்பட்டு, மீண்டும் பணக்காரர்களாக ஆகி இறக்கும் வரை அப்படியே வாழ்கிறார்கள். இன்னும் சிலர் சிலர் பணக்காரர்களாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாகவே வாழ்ந்து முடிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.

“என்ன காரணம், எல்லாம் நேரம்தான் காரணம்! அவரவர் பிறந்த நேரம், ஜாதகம் என்று சிலர் சொல்வார்கள்” என்றோம்.

“ஒருவகையில் பார்த்தால் நேரம்தான் காரணம் என்பது உண்மைதான். பிறக்கும் நேரமும், காலமும் நம் கையில் இல்லை. அது அவரவர் செய்த பூர்வபுண்ணியம். ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். பிறக்கும் நேரம் வேண்டுமானால் நம் கையில் இல்லாமல் இருக்கலாம். சிறு வயதில் நல்ல கல்வி கிடைக்காமல் தடைபடலாம். அதனால் ஏழ்மையான வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலை எற்படலாம்” என்றார். பிறகு,

“ஆனால் ஏழையாகவே வாழ்ந்து காலத்தை ஓட்டுவதும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து வாழ்வை ரசிப்பதும் அவரவர் கையில், அதாவது அவர்கள் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. ஏழையாகப் பிறப்பது நம் தவறல்ல. ஆனால் ஏழையாகவே இருப்பதும், ஏழையாகவே வாழ்வதும் கண்டிப்பாக நம்முடைய தவறுதான்.

இதையே கண்ணதாசன் ஒரு பாடலில்

பூமியில் இருப்பதும்

வானத்தில் பறப்பதும்

அவரவர் எண்ணங்களே…

இருக்குமிடம் எதுவோ

நினைக்குமிடம் பெரிது

போய்வரும் உயரமும்

புதுப்புது உலகமும்

அவரவர் உள்ளங்களே…

நெஞ்சினில் துணிவிருந்தால்

நிலவுக்கும் போய்வரலாம்

என்று பாடியிருப்பார். எனவே முதலில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். பின் அதை செயல் படுத்த வேண்டும். அதன் மூலம் நீங்கள் நினைத்த உயரத்தை அடையலாம்” என்றார்.

சிறிது நேரம் கழித்து, “ஒரு கதை சொல்லட்டுமா” என்று கேட்டார்.

“இது என்ன கேள்வி, நீர் சொல்வதுதான் சுவையாக இருக்குமே. கேட்கத் தயாராக இருக்கிறோம்” என்றோம்.

Advertisements

2 பதில்கள் to “நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்வோம்!”

  1. Pandian Govindarajan செப்ரெம்பர் 11, 2012 இல் 7:50 முப #

    நல்ல ஆரம்பம்.
    வில்லவன்கோதை

    • rasippu செப்ரெம்பர் 11, 2012 இல் 8:56 முப #

      தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! திரு வில்லவன் கோதை அவர்களே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: