கனவில் வந்தது யார்? – நகைச்சுவை!

8 செப்

கவிஞர் கடிவேலு வந்தார். “நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்பதை இன்றாவது சொல்வீரா?” என்று கேட்டேன். “அதற்குத்தானே வந்திருக்கிறேன்” என்று ஆரம்பித்தார் கவிஞர்.

“சொல்லும்” என்றோம் ஆர்வமாக.

“வெயிட்டான ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறீரா?” என்று கேட்டார். நாம் உடனே, “ஓ!, நிறையப் பேரைப் பார்த்திருக்கிறோம். 200 பவுண்டு, 250 பவுண்டு எடையுள்ள ஆட்களை எல்லாம் டிவியில் கூட காட்டுவார்களே” என்றோம்.

“நான் அந்த வெயிட்டைச் சொல்லவில்லை. ஒரு மனிதர் செல்வாக்கு மிக்கவராக இருந்தால் அவரை வெயிட்டான ஆள் என்று சொல்வதில்லையா? அதைத்தான் சொல்கிறேன்” என்றார்.

“ஆமாம், நாமும் அதுபோல் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்” என்றோம்.

“அது போல் வெயிட்டான மனிதராக நீர் மாறி விட்டால், உமது நேரம் பல மடங்காக பெருகி விடும்” என்றார்.

“அது எப்படி? புரியவில்லையே” என்றோம். வெயிட்டான மனிதராக எப்படி ஆவது? அதனால் எப்படி நேரம் பல மடங்காக பெருகும்? ஒரே குழப்பமாக இருந்தது.

“நீர் ஈர்ப்பு சக்தியுள்ள மனிதராக ஆகிவிட்டால், நீர் வெயிட்டான மனிதராக ஆகிவிட்டதாக அர்த்தம்” என்றார்.

“ஈர்ப்பு சக்தியுள்ள மனிதராக எப்படி ஆவது? கொஞ்சம் புரியும்படி சொல்லும்” என்றோம்.

“நடிப்புக்கலையில் நீர் தேறிவிட்டால் உமக்கும் ஈர்ப்பு சக்தி வந்து விடுமல்லவா?” என்றார்.

நடிப்புக்கலையில் தேறுவதா? அதற்காக நம்மை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் போய் சேர்ந்து படிக்கச் சொல்கிறாரா? இன்னும் குழப்பம் அதிகமானது.

இருந்தாலும் என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்து கொள்வதற்காக, “அப்படி ஈர்ப்பு சக்தி வந்தால் என்ன ஆகும்?” என்றோம்.

“உமது நேரம் மெதுவாக நகரும். பத்து மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம். அப்போது உமது நேரம் பத்து மடங்காக பெருகும் அல்லவா?” என்றார்.

“உண்மையாகவா, நீர் சொல்வதை எப்படி நம்புவது?” என்றோம்.

“கருப்பு குழி (Black Hole) இருக்கிறதல்லவா? அது மிகவும் அதிகமான ஈர்ப்பு சக்தி கொண்டதுதானே? அதனருகில் சென்று பார்த்தீரானால் மற்றதெல்லாம் வேகமாக இருப்பது போல தெரியும்” என்றார்.

கருப்பு குழிக்கு அருகில் செல்வதா? அது பக்கத்தில் எது சென்றாலும் விழுங்கி விடுமே. ஏன் நட்சத்திரங்கள் கூட அதனிடம் இருந்து தப்ப முடியாது என்று சொன்னீரே?” என்றோம்.

“விழுங்கி விடாத தூரத்தில் இருந்து கொண்டு பார்க்கலாம்” என்றார்.

“சரி அப்படியே அது நடக்கக்கூடியதாக இருந்தாலும் அங்கே எப்படி போவது? அதெல்லாம் எங்கோ பல ஒளி ஆண்டுகள் தூரத்தில் அல்லவா இருக்கும்?” என்றோம்.

“இதோ பாரும். இதுதான் வார்ம் ஹோல் (Worm Hole) இதில் நுழைந்தீர் என்றால், சில நொடிகளிலேயே நீர் பல ஒளி ஆண்டுகள் தூரத்தை கடக்க முடியும்” என்று வெளிர்நீல கலரில் இரண்டு புனலை தலைகீழாக ஒட்ட வைத்தது போல ஒரு வளையத்தைக் காண்பித்தார்.

நான் அப்படியா என்று சொல்லிக் கொண்டே அதில் நுழைந்தேன். என்ன ஆச்சரியம்! என் கண் முன்னால் பல வித அளவிலான நட்சத்திரங்கள், கேலக்ஸிகள் எல்லாம் தெரிந்தன. எங்கே பார்த்தாலும் ஒளிமயம். அதோ அங்கே ஒரு கருப்பு குழி (Black Hole) கூட தெரிகிறது. அதனருகில் செல்ல முயன்றேன்.

“என்னங்க… என்னங்க….” தூரத்தில் ஏதோ ஒரு குரல் கேட்கிறதே. என்ன ஆச்சரியம்! இங்கு கூட தமிழில் பேசுகிறார்களே! ஆனால் இது என் மனைவியின் குரல் போலல்லவா இருக்கிறது? இங்கே எப்படி வரமுடியும்?

“என்னங்க… உடம்பு எதுவும் சரியில்லையா? ஏழு மணி ஆகிவிட்டதே, இவ்வளவு நேரம் தூங்கமாட்டீர்களே! என்ன ஆயிற்று, உடம்புக்கு என்ன?” என்ற மனைவியின் குரல் கேட்டு விழித்தேன். அய்யய்யோ! அப்படியென்றால் இதுவரை நான் கண்டது எல்லாம் கனவா? ரொம்பவும் தத்ரூபமாக இருந்ததே?

என்ன நடந்தது என்று புரிய சில நொடிகள் ஆனது. நேற்று கவிஞர் கடிவேலுவிடம் போனில் பேசிவிட்டு வந்தேனல்லவா? அடுத்த நாள் வந்து நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்பது பற்றி சொல்லப் போகிறார் என்று நினைத்துக் கொண்டே படுத்துத் தூங்கியதால் ஏற்பட்ட விசித்திரமான கனவுதான் இது! அட கடவுளே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: