விமர்சனமும் அதற்கான விளக்கமும்

6 செப்

உண்மை எது? நடிப்பு எது? உணர்ந்து கொள்ளுங்கள்! இடுகையைப் படித்து விட்டு நமது நண்பர் நம்மை தொலைபேசியில் அழைத்தார். எடுத்தவுடனேயே “கவிஞர் கடிவேலு எதைச் சொன்னாலும் சரி என்று அதற்கு விளக்கம் கொடுத்து விடுவீரா?” என்று கேட்டார். அவருடைய குரலில் லேசான கோபத்தை உணர முடிந்தது.

“என்ன விஷயம் என்று சொல்லுங்கள்” என்றேன்.

“முதலாவதாக சென்ற இடுகையில் வந்த கவிதை பழங்காலத்து நடையில் எதுகை மோனையோடு படிக்கவே கடினமாக இருந்தது. அதுவாவது பரவாயில்லை. அவர் சொன்ன கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை” என்றார் இன்னும் கொஞ்சம் சூடாக.

“தெளிவாகச் சொல்லுங்கள்” என்று மறுபடி கேட்டுக் கொண்டேன்.

“இதுவரை நாம் படித்தது, கேள்விப்பட்டது எல்லாம், உண்மையைக் கடைப்பிடி, எவ்வளவு சோதனைகள், தடைகள் வந்தாலும் உண்மையிலிருந்து பிறலாதே; போராடு, முடிவில் உண்மை ஜெயிக்கும் வரை போராடு என்பதுதானே. ஆனால் கவிஞர் கடிவேலுவோ நடிப்பவனைக் கண்டால் நீயும் நடித்து விடு என்கிறார். என்ன பிதற்றல் இது” என்றார்.

“பொறுங்கள்… அவரும் உண்மையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தத்தானே செய்கிறார். உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதனைக் கண்டால் உன்னுடைய நம்பிக்கைக்கு உரிய நண்பனாகப் போற்றிடு என்றுதானே சொல்கிறார்” என்றேன்.

“அதெல்லாம் சரிதான். ஆனால் நடிப்பவனைக் கண்டால் நீயும் நடித்து விடு என்கிறாரே, முன்னுக்குப் பின் முரணாக அல்லவா இருக்கிறது? உண்மையின் மீது நம்பிக்கையுள்ளவனை நடிகனைப் போல் நடி என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார்.

“சரி, இதற்கு சரியான விளக்கத்தை அவரிடமே கேட்கிறேன்” என்றேன்.

“அத்தோடு நடிப்புக்கு முன்னால் உண்மைக்கு மதிப்பிருக்காது என்கிறார். அது தவறு. உண்மைக்கு என்றுமே மதிப்பு உண்டு. வாய்மையே வெல்லும் என்று சொல்லிக் கேள்விப்பட்டதில்லையா?” என்றார்.

“சரி, இதையும் கவிஞரிடமே கேட்டு சொல்கிறேன்” என்றேன்.

அத்தோடு அவர் விடவில்லை. “நடிகர்களை நட்சத்திரங்கள் என்று அழைப்பது முரண்பாடு என்று சொல்கிறீர். அவர்கள் நட்சத்திரங்கள் போன்று மின்னுவதால் அவ்வாறு அழைப்பது சரிதானே, இதில் முரண்பாடு என்ன இருக்கிறது?” என்று நம் மீதும் பாய்ந்தார்.

“சரிதான்! உங்களுடைய கருத்துக்களை பரிசீலனை செய்து சரியான விளக்கத்தை அளிக்கிறோம்” என்று சொன்ன பின்தான் சமாதானமானார். கவிஞர் சொல்வது சரியாகத்தானே இருக்கும். அதனால்தானே அவருடைய கவிதையை, அவருடைய கருத்தை ஒட்டியே விளக்கி இருந்தோம். இவர் இப்படி மறுப்பு தெரிவிக்கிறாரே என்று உடனே கவிஞர் கடிவேலுவை போனில் அழைத்தோம். நண்பர் சொன்ன மறுப்புக்களைத் தெரிவித்தோம்.

அதைக் கேட்டு கவிஞர் சிரித்தார். நமக்கு குழப்பமாக இருந்தது. என்ன மனிதர் இவர்! மறுப்பைக் கேட்டு ஆவேசப்படுவார் என்று பார்த்தால் சிரிக்கிறாரே!

“என்ன கவிஞரே, சிரிக்கிறீர்? அவருக்கு என்ன பதில் சொல்வது?” என்று கேட்டேன்.

“ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் அவர் என்ன சொன்னார்? நம் கவிதை பழங்காலத்து நடையில் இருக்கிறது என்றுதானே?. அந்த நடையில்தான் நம்முடைய தமிழ் இலக்கியங்கள் இருக்கின்றன. தமிழ் சமுதாயம் அறிவாற்றலோடு திகழ்வதற்கு நமது பாரம்பரியமும், தமிழில் உள்ள இலக்கியங்களும் முக்கிய காரணம். அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை நம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த நடையில் படிக்கும் பழக்கத்தை மறக்கக் கூடாது. இப்போது வசன நடை, புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை போன்று நிறைய வந்து இருப்பதால், அந்த நடையிலேயே எல்லாவற்றையும் படித்துப் பழகி விட்டதால், பழைய மரபுநடை கவிதை அலர்ஜியாகத் தெரிகிறது. எனவே பழைய நடையில் கவிதை வாசிக்கக் கற்றுக் கொள்வது நல்லதுதான்.

சரி, அடுத்த விஷயம் என்ன? நடிப்பவனைக் கண்டு நீயும் நடித்து விடு என்பது, நமக்கு ஏற்கெனவே சொல்லிக் கொடுத்த, கேள்விப்பட்ட கருத்துக்களுக்கு முரணாக இருக்கிறது என்பதுதானே? நாமும் உண்மையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். அது தான் அடிப்படை. எப்போதும் நடுநிலையுடன் இருந்து உண்மையை, சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது கொள்கையும். ஆனால் மக்களுடன் பழகும் கலையில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் வேறு சில விஷயங்களையும் கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும். இதைத்தான் மக்களுடன் உறவாடும் திறன் என்ற புத்தகத்தில் லெஸ் கிப்ளின் எடுத்துக் காட்டுகிறார்.

அதாவது மக்களையும், மனிதர்களையும் எப்படி புரிந்து கொள்வது, எப்படி திறம்பட பேசுவது, மக்களுடன் எப்படி உடன்படுவது, அவர்களை முக்கியமானவர்களாக எப்படி உணரும்படி செய்வது, அவர்களிடம் எப்படி செல்வாக்கு செலுத்துவது, மக்களை எப்படி திறம்பட புகழ்வது, எப்படி நன்றி கூறுவது, எப்படி நல்லெண்ணத்தை உருவாக்குவது என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறார். இது வெற்றி பெற எண்ணும் மனிதனுக்கு தேவையான ஒரு பாடம். நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களுக்கும் இது தேவையானதுதான்!

அந்த புத்தகத்திலிருந்து சில வரிகள் உங்களுக்காக…

………………

நீங்கள் எவ்வளவுக்கு மக்களை முக்கியமாக உணரும்படி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு மக்கள் உங்களை மதிப்பார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

………………

……………..

மக்களுடன் மாறுபடுவது முட்டாள்களின் செயல். குறிப்பாக அடுத்தவர் தவறாக இருக்கும்போது உடன்படுவது கெட்டிக்கார மனிதனின், பெரிய மனிதனின் செயல் என்பதை உங்களுடைய உயிர் உள்ளவரை மறக்க வேண்டாம்.

………………

எனவே இந்தக் கலை, தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு அடிப்படையான ஒன்றாகும்.

அடுத்து அவர் சுட்டிக்காட்டுவது நடிப்பவர்களை நட்சத்திரங்கள் என்று அழைப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது என்றுதானே? இந்த பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்தான் ஒரு கட்டத்தில் அதன் ஈர்ப்பு சக்தி மிகமிக அதிகமாகி தன்னையே சாப்பிட்டு விடும் அளவுக்கு அதீத ஈர்ப்பு சக்தி கட்டுக்கு அடங்காமல் போய் பிறகு கருப்பு குழியாக (Black Hole) மாறுகிறது. அதனால் ஈர்ப்பு சக்தி மிக்க நடிகர்களை நட்சத்திரங்கள் என்று அழைப்பது ஒருவகையில் பொருத்தமானதுதான். ஆனால் எல்லோரையும் அப்படி அழைப்பது கொஞ்சம் முரண்பாடாக இருந்தாலும் பொதுவாக நடிகர்களை நட்சத்திரங்கள் என்று அழைப்பதில் தவறில்லை என்பது என் கருத்து” என்றார்.

நண்பருடைய விமர்சனத்தையும்,  அதற்கு கவிஞரின் விளக்கத்தையும் கொடுத்து விட்டோம். எது சரி என்று தீர்மானிப்பதை அறிவார்ந்த வாசகர்களிடமே விட்டு விடுகிறோம்.

Advertisements

ஒரு பதில் to “விமர்சனமும் அதற்கான விளக்கமும்”

Trackbacks/Pingbacks

  1. கனவில் வந்தது யார்? – நகைச்சுவை! « இலவசம் - செப்ரெம்பர் 25, 2012

    […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: