உண்மை எது? நடிப்பு எது? உணர்ந்து கொள்ளுங்கள்!

4 செப்

கவிஞர் கடிவேலு கொடுத்த கவிதையைப் படித்தபோது, அது நாம் கேட்ட கேள்விக்கான பதிலாக மட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும், நட்புக்கும் ஏன் வியாபாரத்திற்கும் கூட மிகவும் அவசியமான ஒரு கருத்து என்பது புரிந்தது என்று சொன்னோம் அல்லவா? முந்தைய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும். இதோ அந்தக் கவிதை:

தன்னம்பிக்கை யோடுஉண்மை நிலையெடுத்த மனிதனை

உன்நம்பிக்கை யானநண்ப னாகபோற்றிடு – பம்மிஉன்

னோடுகபட நாடகம் ஆடுகின்ற நடிப்புகண்டு

ஓடுபடம் தனிலே நடிப்பவன் போல்மாறிடு

 

உண்மைநிலை பெற்றவனில் நடிப்பும், நீமெச்சும்

தன்மைபெற்ற நடிகனிடம் உண்மையும் – வன்மைநிலை

பெற்றஅதர் மமென்பது திட்டம்; இன்மைநிலை

பெற்றுஉன் கணக்கில்தா னேற்படும் நட்டம்

 

உண்மையும் நடிப்பும் என்றும் சேராது

வெண்மையும் கருப்பும் வண்ணம் ஆகாது

வெண்மைக்கு கருப்பிடம் மதிப்பிருக் காது;இந்த

உண்மையை அறிந்தவனுக்கே துன்பம் நேராது

 

உண்மையா நடிப்பா எனஉணர்ந்து நீமீன்ஆகிடு

வென்றிதனை வடிக்கமென் மையாகஉறவாடு – வெண்மை

யெல்லாம் பாலென்றே தான்திரிந்தாலோ, உன்செயல்

எல்லாம் வீண்தான் செத்தகரு வாடுபோல்

கவிதையைப் படித்து முடித்த நமக்கு வியப்புதான் மேலிட்டது. பல பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை ஒரு கவிதையிலேயே மிக எளிமையாக விளக்கி இருக்கிறாரே என்று. நாம் அதை சுருக்கமாக இங்கே விளக்க முயற்சிக்கிறோம்.

இதில் உண்மையை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கவிஞர், அதே சமயத்தில் நடிப்பவனைக் கண்டால் நீயும் அவனிடம் நடித்துவிடு என்கிறார். ஏனென்று உண்மையையும் நடிப்பையும், வெண்மைக்கும் கருமைக்குமாக உவமைப்படுத்தி விளக்குகிறார். அத்தோடு கருப்பும் வெளுப்பும் ஒன்று சேராது; அப்படி சேர்ந்தால் வெண்மைக்கு கருப்பிடம் மதிப்பிருக்காது என்கிறார். எவ்வளவு பெரிய உண்மை.

மேலோட்டமாகப் பார்த்தால் கருப்புக் கலரையும் வெள்ளைக் கலரையும் கலந்தால் அங்கே கருப்புதான் இருக்கும், வெண்மை மறைந்து விடும் என்பது அர்த்தமாகும். ஆனால் கருப்பு மட்டுமில்லாமல் எந்த கலரை வெண்மையுடன் கலந்தாலும் அங்கு வெண்மை மறைந்து விடுமே, அப்புறம் ஏன் கருப்பை மட்டும் சொல்லியிருக்கிறார் என்று இன்னும் கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தோம் என்றால் வெண்மை என்பதை நட்சத்திரத்திற்கும், கருப்பு என்பதை கருப்பு குழிக்குமாக (Black Hole) உவமைப் படுத்துகிறார் என்பது புரிந்தது. பிளாக் ஹோலுக்கு அருகில் சென்றால் எவ்வளவு பெரிய நட்சத்திரமானாலும் ஸ்வாஹா (ஒன்றுமில்லாமல்) ஆகிவிடும். ஏன் ஒளிக்கற்றை கூட அதனிடமிருந்து தப்பிக்க முடியாது.

அதாவது சக்தி வாய்ந்த நட்சத்திரமாக உண்மை இருந்தாலும், நடிப்பு என்னும் பிளாக் ஹோலுக்கு முன்னால் மதிப்பிழந்து விடும். அதன் ஈர்ப்பு சக்தி அப்படி. நடிப்புக்கு அப்படி ஒரு ஈர்ப்பு சக்தி. ஆனால் நடிகர்களை நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்; என்ன ஒரு முரண்பாடு?. அதனால்தான் மக்களுக்கு எதை நம்புவது என்று புரியவில்லை. முடிவாகச் சொல்ல வேண்டுமென்றால் நடிப்பவனிடத்தில் உண்மையாய் இருப்பவனுக்கு மதிப்பிருக்காது.

இன்னொரு உவமையாக மீனை சொல்லியிருக்கிறார். அதாவது எது உண்மை, எது நடிப்பு என்பதை கண்டு கொள்வதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பதை மீனுக்கு உவமைப் படுத்தியிருக்கிறார். அப்படி விழிப்புணர்வோடு இருக்கவில்லை என்றால், வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பினால் செத்த கருவாடு மாதிரி ஆகிவிடுவாய் என்று கூறுகிறார். அத்தோடு உண்மையை மட்டுமே நம்பக் கூடாது. நடிப்பையும் கற்றுத் தேற வேண்டும் என்கிறார்.

உண்மையை போற்றும் மனிதனிடம் நடிக்கக் கூடாது. நடிப்பவனிடம் உண்மையாக இருக்கக் கூடாது என்று கூறுகிறார், அவ்வாறு செய்வது அதர்மம், அப்பாவித்தனம் என்று சாடுகிறார்; அதனால் உனக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படும் என்கிறார். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஏதாவது ஒன்றை அதிகமாக பற்றியுள்ளவன், உடனடியாக மாறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. உதாரணமாக நடிக, நடிகைகளின் மண வாழ்க்கையைச் சொல்லலாம். உண்மையான கணவன் அல்லது மனைவியிடம் அவர்களால் நடிக்காமல் இருக்க முடிவதில்லை. அதனால் ஏற்படுவதுதான் கருத்து வேறுபாடு, மணமுறிவு. இது மற்றவர்களுக்கும் கூட பொருந்தும்.

ஆனால் இது ஒரு கலை. வெற்றி பெறத் தேவையான கலை. அதாவது முதலில் எதிராளி உண்மையானவனா அல்லது நடிகனா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் உடனடியாக உண்மையானவனாகவோ, நடிகனாகவோ மாறிவிட வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும். பழக்கத்தினாலும், விழிப்புணர்வினாலும் இந்தக் கலையை நாளாவட்டத்தில் கற்றுத் தேர்ச்சி பெற முடியும். அப்படி அந்த கலையில் வல்லவனாகி விட்டால் எதிலும் வெற்றி அடைவது உறுதி என்பதை எடுத்துக் காட்டுகிறார் கவிஞர். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் தானே?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: