ஆமாம்! நம்பிக்கைதான் வாழ்க்கை! – பகுதி 2

1 செப்

புற்று நோய் வந்த ஒருவரை தான் பார்க்கப் போனதாகவும், தன்னுடன் ரவிக்குமார் என்ற நண்பர் ஒருவரையும் அழைத்துப் போனதாகவும், ரவிக்குமார் தன் கதையை அந்த நோயாளி நண்பரிடம் சொன்னதாகவும் கவிஞர் கடிவேலு சொன்னதைக் கேட்டு மிகவும் பிரமிப்பாக இருந்தது என்று சொன்னேன் அல்லவா? புதிதாக வந்தவர்கள் முந்தின இடுகையை படிக்க இங்கே சொடுக்கவும். ஆமாம்! நம்பிக்கைதான் வாழ்க்கை!

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தேன். அவர் சொன்ன விஷயங்களை ஜீரணம் செய்வதற்கு நமக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு கவிஞரைப் பார்த்தேன். ஏதோ யோசனையில் இருந்தார். அவருடைய கவனத்தைக் கவரும் விதமாக, “கவிஞரே, புற்று நோயே சரியாகும் அளவுக்கு, அது என்ன துணை உணவு. அதைப் பற்றி கொஞ்சம் விபரமாகச் சொல்லும்?” என்று கேட்டேன்.

“அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் ஒரு விஷயம். கோடிக்கணக்கான செல்களால் ஆனதுதான் நம் உடம்பு என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார் நம்மைப் பார்த்து.

“ஆமாம். அது தெரிந்த விஷயம்தானே?” என்றேன். நமது பதிலை ஆமோதித்தவர் போல தொடர்ந்து, “நமது உடம்பில் ஒவ்வொரு நொடிக்கும் கோடிக்கணக்கான செல்கள் இறக்கின்றன. மறுபடி கோடிக்கணக்கான செல்கள் பிறக்கின்றன. உள்ளே ஒரு பெரிய தொழிற்சாலை போல் வேலை நடந்து கொண்டிருக்கிறது” என்றார் கவிஞர்.

“ஆமாம், பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

“நமக்கு உடலில் எப்படி சக்தி கிடைக்கிறது தெரியுமா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

“நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் சக்தி கிடைக்கிறது” என்றேன். நமக்கும் கொஞ்சம் விஷயம் தெரியும் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா?

“சரி, அந்த உணவு எப்படி சக்தியாக மாறுகிறது?” என்று கேட்டார். “சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றேன். தெரியாது என்பதை வேறு எப்படி சாமர்த்தியமாக சொல்வது?

“அது கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம். அதை ரொம்பவும் விலாவாரியாகச் சொன்னால் போரடிக்கவும் செய்யலாம். அதனால் நான் புரிந்து கொண்ட விஷயத்தை சிம்பிளாகச் சொல்ல முயற்சி செய்கிறேன்” என்று பெரிய பீடிகை போட்டார்.

“எதுவானாலும் சொல்லும் கேட்டுக் கொள்கிறோம்” என்றேன்.

“நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறுவதற்கு, நம் உடம்பின் உள்ளே ஒவ்வொரு செல்லிலும் ஒரு வேலை நடைபெறுகிறது. அதற்குத் தேவையான ஆக்ஸிஜனை இரத்தமும், குளுக்கோஸை இன்சுலீனும் கொண்டு போய் சேர்க்கின்றன. அந்த வேலை நடைபெற்று சக்தியாக மாறும்போது, சில தேவையில்லாத பொருட்களும் உருவாகின்றன. அதை ஃப்ரீ ராடிகல்ஸ் (Free Radicals) என்று சொல்வார்கள். இவை மிகவும் ஆபத்தானவை” என்று நிறுத்தினார்.

“ஆபத்தானவையா, எப்படி?” என்று கேட்டேன்.

“ஒவ்வொரு செல்லிலும் அணுவின் மூலக்கூறுகள் உள்ளன அல்லவா? எல்லா அணுவிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை இருக்கும். ஆனால் இந்த ஃப்ரீ ராடிகல்ஸ் என்பது ஒரு குறைபாடுள்ள அணு. ஆக்ஸிஜன் அணுவை எடுத்துக் கொண்டால் எட்டு எலக்ட்ரான், எட்டு புரோட்டான், எட்டு நியூட்ரான் இருக்கும். ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறு என்பது இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்தது. அதில் இரண்டு எலக்ட்ரான்கள் பொதுவானதாக இருக்கும். அதாவது மொத்தமே பதினான்கு எலக்ட்ரான்கள் இருக்கும். இதைத்தான் O2 என்று சொல்கிறோம்” என்றார் விளக்கமாக்.

நமக்கு கொஞ்சம் தலை சுற்றியது. இருந்தாலும் ஆர்வமாக கவனித்தோம். “உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறும் போது இந்த ஆக்ஸிஜன் அணுக்கள் சிலவற்றில் ஒரு எலக்ட்ரான் தவறி, குறைபாடு உள்ளதாக ஆகிவிடும். இதைத்தான் ரியாக்டிவ் ஃப்ரீ ராடிகல்ஸ் என்று சொல்கிறார்கள். இது நம் உடலில் சுற்றிக் கொண்டிருக்கும்போது, தனக்குத் தேவையான இன்னொரு எலக்ட்ரானை எங்காவது ஒரு செல்லிருந்து தன்னோடு சேர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கும்” என்றார்.

சில விஷயங்கள் நாம் அறியாததாகவும், புரிந்து கொள்ள முடியாததாகவும் இருந்தது. இருந்தாலும் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருந்ததால், “அதனால் என்ன கெடுதல்?” என்று கேட்டோம்.

“அவ்வாறு எந்த இடத்தில் இன்னொரு எலக்ட்ரானை தன்னோடு சேர்த்துக் கொள்கிறதோ, அந்த செல்லில் உள்ள ஒரு அணு குறைபாடுள்ளதாக அதாவது ஃப்ரீ ராடிகல்ஸ் ஆக மாறிவிடும். பிறகு அது வேறு எங்காவது இன்னொரு எலக்ட்ரானை எடுக்கும். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இது போல் பல ஃப்ரீ ராடிகல்ஸ் நம் உடலில்உருவானால் என்ன ஆகும்?” என்றார்.

“என்ன ஆகும்?” என்று திருப்பிக் கேட்டோம். நமக்கு அதுபற்றி தெரியாததால்!

“இது போய் நமது DNA வையே சிதைத்து விடும். அதனால் நமக்கு நோய்கள், குறிப்பாக புற்று நோய் ஏற்படவும், அது வளர்ச்சியடையவும் வாய்ப்பிருக்கிறது. புற்று நோய்க்கு பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு முக்கிய காரணம்” என்றார். எதைப்பற்றி பேசுகிறார் என்று இப்போது நமக்கு ஓரளவு புரிந்தது. புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி நமக்கு விளக்குகிறார்.

“அது சரி, நாம் சாப்பிடுவதும், அது சக்தியாக மாறுவதும் இயல்பாக நடைபெறுவதுதானே! அதில் இதுபோல் ஃப்ரீ ராடிகல்ஸ் உருவாகிறது என்றால், எல்லோருக்குமல்லவா நோய் வர வேண்டும்?” என்றேன்.

“நல்ல கேள்வி” என்று பாராட்டினார். பிறகு அவரே தொடர்ந்து, “நமது உடலிலேயே இயற்கையாகவே இந்த ஃப்ரீ ராடிகல்ஸை அழிப்பதற்கு வழி இருக்கிறது. அதுவும் தானாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் புகை பிடிப்பது, வெளியில் உள்ள சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், சூரிய வெப்பம், நமது உணவுப் பழக்கம் போன்ற வேறுசில காரணங்களாலும் இந்த ஃப்ரீ ராடிகல்ஸ் உருவாவது அதிகமாகிறது. அப்போது அதை அழிப்பதற்கு உடம்பில் சக்தி இருக்காது அல்லவா?” என்றார்.

“இப்போது புரிகிறது. சரி, இந்த நிலமையை எப்படி சரி செய்வது?” என்றோம் ஆர்வமாக.

“நமது உணவில் போதுமான அளவில் வைட்டமின்கள் இருந்தால், இந்த ஃப்ரீ ராடிகல்ஸ் எண்ணிக்கை குறையும். அதிலும் குறிப்பாக வைட்டமின் C யும், வைட்டமின் E யும் அவசியம் தேவை. அவை தன்னிடம் மிகுதியாக உள்ள எலக்ட்ரானை அந்த ஃப்ரீ ராடிகல்ஸ்க்கு அளிக்கிறது. அதனால் அது முழுமையான அணுவாக மாறுகிறது. அந்த வகையில் அதனால் வரக்கூடிய நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. வைட்டமின் C யைப் பற்றி ஏற்கெனவே எது விலை அதிகம்? எது விலை குறைவு? இடுகையில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

“சரிதான். அவருக்கு வைட்டமின் C யும், வைட்டமின் E யும் உள்ள துணை உணவுகளைக் கொடுத்தீராக்கும்?” என்றோம். “பரவாயில்லையே, டக்கென்று புரிந்து கொண்டு விட்டீரே!” என்றார்.

“அந்த நண்பருக்கு நம்பிக்கை உண்டானதா?” என்று கேட்டேன்.

“ஆமாம், நம்பிக்கைதானே வாழ்க்கை!” என்றார் கவிஞர்.

மன்னிக்கவும். இந்த இடுகையும் நீளமானதாக ஆகிவிட்டது. மீதியை அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

தங்களது கருத்துக்களை, இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் இருந்து மாறுபட்ட கருத்தாக இருந்தாலும் சரி, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவற்றை கவனத்தில் கொண்டு சரியான கருத்துக்களை ஏற்று பதிவேற்றுவதில் மகிழ்ச்சியடைவோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: