பொன்னான நேரம் எப்படி யெல்லாம் வீணாக்கப்படுகிறது!?

22 ஆக

உங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறீர்கள்? (தொடர்ச்சி…)

நாம் எப்படி நமது நேரத்தை செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கைத்தரம் அமைகிறது என்று கடந்த இடுகையில் சொன்னேன் அல்லவா? இரயில் ஓடிய வேகத்தில் நம் சிந்தனையும் ஓடியது. ஒரு சில வசதிகளுக்காக இப்படி பயணத்திலேயே பாதி வாழ்க்கையை சிலர் கழிக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது. காலம் பொன் போன்றது என்று சொல்கிறார்கள். ஆனால் இப்படி எத்தனையோ பேர் அதன் அருமை தெரியாமல் அதை வீணடிக்கிறார்கள். நேரத்தை வீணடித்து விட்டு பிறகு, தனக்கு நேரம் சரியில்லை, ஜாதகம் சரியில்லையென்று புலம்புவார்கள்.

உண்மையில் காலம் விலை மதிப்பற்றது. ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கது. வேறு எது போனாலும் திரும்ப கிடைத்து விடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த நொடி, இந்த நிமிடம் போனால் மறுபடி வரவே வராது என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு நிஜம். இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட யாரும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தின் மதிப்பை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.

எப்படியெல்லாம் நேரம் வீணடிக்கப் படுகிறது என்பதை யோசித்தால், நாம் சரியாக நேரத்தை உபயோகப்படுத்துகிறோமா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். எப்போது TV என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்ததோ, அன்றே இந்த வழக்கம் ஆரம்பமாகி விட்டது. வீட்டில் ஒரு மூலையில் சாதுவாய் உட்கார்ந்திருக்கிறதே, TV என்ற பெயரில் ஒரு பெட்டி, அது நம்மைப் படாதபாடு படுத்துவதோடு நம்முடைய பெரும்பாலான நேரத்தையும் விழுங்கி விடுகிறது.

அத்தோடு இப்போது செல்போன் என்று ஒன்று வந்திருக்கிறது, அது படுத்துகிற பாடு சொல்லி மாளாது. “டேய், கணேசா, நீ எங்க இருக்கே?” என்ற சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். நானும் பார்த்தேன். ஒருவர் செல்போனை காதில் வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார். “என்னது, A/C பெட்டிக்கு பின்னால் உள்ள பெட்டியில் இருக்கியா? நானும் அங்கேதான்டா இருக்கிறேன்” என்றதும், இரண்டு இருக்கைக்கு முன்னால் இருந்த ஒருவர் செல்போனைக் காதில் வைத்தவாறே எழுந்து திரும்பிப் பார்த்தார். அதைக் கண்டு எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

அப்போதுதான் கவனித்தேன். நான் இருந்த இருக்கைக்கு பக்கத்தில், எதிரில் இருந்த அனைவரது கையிலும் (தூங்குகிற நண்பரைத் தவிர) செல்போன் இருந்தது. இந்த செல்போன் இருக்கிறதே, அதை வைத்துக் கொண்டு சிலர் படாதபாடு படு(த்து)கிறார்கள். எப்போது பார்த்தாலும் SMS அனுப்புவது, கேம் விளையாடுவது அல்லது யாருடனாவது போனில் பேசிக்கொண்டேயிருப்பது; இல்லாவிட்டால் அந்த ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்கிறேன் பேர்வழி என்று நேரத்தை வீணடிப்பது. இவர்களிடம் போய் ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக, வந்து கலந்துகொள்ளுங்கள் என்று அழைத்தால் ‘டைம்’ இல்லை என்று ஸ்டைலாகச் சொல்வார்கள்.

நேர விரயத்தில் இன்டர்நெட்டின் பங்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆபீஸிலோ, வீட்டிலோ கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இன்டர்நெட்டுக்குள் நுழைந்து விட்டால் பலருக்கு அதை விட்டு வெளியே வருவதற்கே மறந்து விடும். அடுத்த லிங்க், அடுத்த லிங்க் என்று போய்க் கொண்டே இருக்கும். இப்படிச் சொல்வதால் TV யோ, செல்போனோ, இன்டர்நெட்டோ தேவையில்லை என்று சொல்வதாக அர்த்தமாகாது. இன்றைய வாழ்க்கை நடைமுறையில் அவையெல்லாம் இல்லாமல் வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

ஆனால் அதைப் பயன்படுத்துவதே ஒரு போதை போலாகி நம்முடைய பொன்னான நேரம் விரயமாவதைத் தான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதே விஷயங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்பவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகச்சிலரே. பெரும்பாலானோர் மேலே சொன்னது போல மதிப்பு மிக்க பல மணி நேரங்களை வீண்டிக்கவே செய்கிறார்கள்.

சென்ற இடுகையில் குறிப்பிட்டது போல போக்குவரத்திலும், மற்ற காத்திருப்புகளிலும் தவிர்க்க முடியாமல் அல்லது அதன் தீர்வுக்கான வழி தெரியாமல் நேரத்தை விரயம் செய்வது ஒரு பக்கம் என்றால் தெரிந்தொ தெரியாமலோ பலர் ஆக்கபூர்வமற்ற செயல்களில் ஈடுபட்டு வீணாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

இந்த நேர விஷயத்தில் கடவுள் யாரையும் வஞ்சிக்கவில்லை. எல்லோருக்கும் சரிசமமாக ஒரே அளவு நேரத்தைத்தான் கொடுத்திருக்கிறான். அவன் கறுப்போ, சிகப்போ, எழையோ, பணக்காரனோ, படித்தவனோ, படிக்காதவனோ எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். யாருக்கும் ஒரு நிமிடம்கூட அதிகமோ, குறைவோ கிடையாது. சிலர் அதை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் நினைத்ததைச் சாதித்து, புகழின் உச்சத்தை அடைகிறார்கள். ஆனால் பலர் நல்ல அறிவு, திறமை இருந்தும், சரியாக நேரத்தை பயன்படுத்த தவறி வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு வாழ்வில் முன்னேற வேண்டுமானால் ஒரு நொடியைக் கூட வீணடிக்கக் கூடாது என்று எனக்கு அறிவுறுத்திய நான் குருவாக மதிக்கும் திரு. மோகன் ராமநாதன் அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

நேரம்தான் பணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்படி பணத்தை முதலீடு செய்து மேலும் மேலும் அதைப் பெருக்க முடியுமோ, அது போல நேரத்தையும் முதலீடு செய்து பலப்பல மடங்காக வருமானத்தை பெருக்க முடியும். நேரத்தின் அருமையைப் புரிந்து கொள்வோம். விரயமாகும் நேரத்தைப் பற்றி விழிப்புணர்வு கொள்வோம். அந்த நேரத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்வோம்.

அப்புறம் ஒரு விஷயம். நீங்கள் அரக்கோணம் இரயில் நிலையத்தில் இறங்கி பஸ் ஸ்டாண்டு போகவேண்டுமென்றால் கொஞ்சம் அதிக தூரம்தான் என்றாலும் மெதுவாக நடந்து போய் விடுவது உத்தமம். ஷேர் ஆட்டோ இருக்கிறதே ஒரு பத்து நிமிடம் மிச்சப்படுத்தலாம் என்று ஆசைப்பட்டு அதில் ஏறி விட்டீர்கள் என்றால் இரயில் நிலையத்திலிருந்து பஸ் ஸ்டாண்டு போவதற்குள் ‘கண்டேன் காதலை’ சினிமா படத்தில் காமெடி நடிகர் சந்தானம் சொல்வது போல நடு முதுகுத்தண்டு நகர்ந்துவிடும். அந்த ரோடு இருக்கும் லட்சணம் அப்படி.

Advertisements

ஒரு பதில் to “பொன்னான நேரம் எப்படி யெல்லாம் வீணாக்கப்படுகிறது!?”

  1. சிவ அய்யப்பன் ஜூன் 23, 2017 இல் 3:39 பிப #

    நேரத்தை நாம் எப்படி செலவு செய்கிறோம் என்று ஒரு மனிதன் சற்று சிந்தித்துப் பார்பானேயென்றால் அது அவனது வாழ்க்கையை திசைதிருப்பும் ஒன்றாக இருக்கும். ஏனென்றால் நேரத்தை வீணடிப்பதில் இன்று ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று போட்டிபோட்டுக்கொண்டு திணரடிக்கிறார்கள் நம்மவர்கள் . சரி அவர்களாவது எப்படியாவது போகட்டும் எதற்கு இந்த அங்கலாய்பபு என்று பார்த்தால் அவர்கள் வீணடிப்பது நம்முடைய நேரத்தைத்தான் என்பது தான் யதார்த்தம். அவர்களை நேர்ந்து விட்டாயிற்று எக்கேடா கெட்டு போங்க என்று ஆனால். கெட்டு போவதற்கு தேர்ந்தெடுப்பது நம்ம மாதிரிப்பட்ட இளிச்ச வாயர்களைத்தான் எப்படியென்றால என்னைப்பொறுத்த அளவில் ஒரு துளி நேரம் கூட வீணடிக்கக் கூடாது என்று நினைப்பவன் நான் ஆனால் மரியாதைக்குரிய நண்பர்கள் வந்து பேசும்போது எப்படி அவர்களை தவிர்ப்பது என்பது சங்கடமாக இருக்கிறது அதனால் அவர்களுக்காக சில நிமிடங்களை செலவிட வேண்டியிருக்கிறதுஃ இது சம்மந்தமாக நிறைய எழுத முடியும் மன உறுத்தல்களை பங்கிட முடியும் அடுத்த முறை பதிவிடுகிறேன் தற்போது இது சம்மந்தமான கடடுரை ஒன்று தயார் செய்துள்ளேன் அடுத்த வாரம் அச்சில் வருகிறது வாய்ப்பிருந்தால் அதை இங்குபதிவிடுகிறேன் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: