உங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறீர்கள்?

20 ஆக

வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருந்தது. வேலை விஷயமாக எப்போதாவது இதுபோல் செல்வது உண்டு. காலை 6.25 மணி இரயிலைப் பிடிக்க வேண்டும். சீக்கிரமே படுத்துத் தூங்கிவிட்டேன். அப்போதுதான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியும். ஆனால் காலை 3.00 மணிக்கே விழிப்பு வந்து விட்டது. அதன்பிறகு தூக்கம் வரவில்லை. சரியாக 4.00 மணிக்கு எழுந்து, குளித்து ரெடியாகி 5.00 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

அந்த அதிகாலை வேளையில் ஆங்காங்கே ஒரு சிலர் நடை பயின்று (உடற்பயிற்சி?) கொண்டிருந்தார்கள். வீடு வீடாக பால் பாக்கெட் போடுபவர்கள், பேப்பர் போடுபவர்கள் சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருந்தார்கள். லேசான குளிரில் நடந்து செல்வது இதமாக இருந்தது. எவ்வளவு இனிமையாக இருக்கிறது. கண்களில் இன்னும் கொஞ்சம் தூக்கம் மிச்சமிருந்தாலும் மனது உற்சாகமாக இருந்தது. இதையெல்லாம் அன்றாடம் அனுபவிக்க முடிகிறதா நம்மால்?

மின்சார இரயிலுக்காக காத்திருக்கும் போது கவனித்தேன். அப்பொழுதும் ஸ்டேஷனுக்கு உள்ளே இருக்கும் பேப்பர் ஸ்டால் திறந்திருந்தது. காலை பேப்பரை வாங்கிக்கொண்டு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தேன். பேப்பரில் கவனம் செல்லவில்லை. அருகே ஒரு ஜோடி அமர்ந்து இருந்தது. அவர்களிடம் ஒருவிதமான உற்சாகம் இருந்தது தெரிந்தது.

இரயில் வந்ததும் அதில் ஏறி அமர்ந்தேன். கிட்டத்தட்ட அந்த பெட்டியில் இருந்த பாதிப்பேர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பாவம்! நம்மைப்போல் அவர்களும் பாதித்தூக்கத்தில் எழுந்து பயணம் செய்கிறார்கள் போலிருக்கிறது. எங்கு செல்வார்கள் என்று யோசித்தேன். ஒருவேளை சப்தகிரி எக்ஸ்பிரஸைப் பிடித்து திருப்பதி செல்வார்களோ? அப்படியிருந்தாலும் எல்லோருமா கோயிலுக்கு செல்வார்கள்?

கொஞ்ச நேரத்திலேயே என்னுடைய கேள்விக்கு விடை கிடைத்தது. என் எதிரில் ஒரு நடுத்தர வயது மனிதர் உட்கார்ந்திருந்தார். ஒரு கறுப்பு பேக்கை மார்போடு அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென விழித்து, “பார்க் ஸ்டேஷன் வந்தால் கொஞ்சம் எழுப்பி விடுங்கள்” என்று என்னிடம் சொன்னார். நான் சரி என்றதும் மறுபடி தூங்க ஆரம்பித்தார். பார்க் ஸ்டேஷன் இன்னும் 15 நிமிடத்தில் வந்து விடும். அதற்குள் ஒரு குட்டித்தூக்கமா?

பார்க் ஸ்டேஷன் வந்ததும் அவரை எழுப்பினேன். நானும் அங்குதான் இறங்க வேண்டும். இறங்கி வெளியே நடந்து சுரங்கப் பாதையில் இறங்க ஆரம்பித்த போது அவரைப் பார்த்தேன். சுரங்கப் பாதையில் இறங்காமல் தடுப்பைத் தாண்டி ரோட்டை கிராஸ் செய்து ஓடினார். ஏதோ அவசரம் போலும். நான் சுரங்கப் பாதையில் இறங்கி ஏறி, இரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தை அடைந்த போது, 6.00 மணி ஆகியிருந்தது.

வண்டியின் ஓரமாக நடந்து காலியிடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்து ஒரு பெட்டியில் ஏறினேன். காலியான ஓர் இருக்கையில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! எதிரே என்னுடன் மின்சார இரயிலில் வந்த மனிதர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் புன்முறுவல் செய்தார். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

“இடம் பிடிப்பதற்காகத்தான் வேகமாக வந்தீர்களா?” என்று கேட்டேன். “ஆமாம். உட்கார இடம் கிடைத்தால் 75 நிமிடங்கள் தூங்கலாமே?” என்றார். என்ன ஒரு கணக்கு!

“எங்கே போகிறீர்கள், அரக்கோணமா?” என்றேன். “ஆமாம். நீங்கள்? திருப்பதிக்கு போகிறீர்களா?” என்று பதிலுக்கு ஒரு கேள்வியைப் போட்டார். “இல்லை, நானும் அரக்கோணம்தான்” என்றேன். “உங்களை இதற்கு முன்னால் பார்த்ததில்லையே?” என்றார். சற்று நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன கேள்வி?

“இல்லை, நீங்கள் தினமும் வருபவராக இருந்தால் எப்போதாவது உங்களை சந்தித்திருப்பேனே! இதுவரை பார்த்ததில்லையே, அதனால்தான் கேட்டேன்” என்றார்.

“நான் தினமும் வருவதில்லை. எப்போதாவது இதுபோல் விடிகாலை நேரத்தில் கிளம்பி செல்வதுண்டு. நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?” என்றேன்.

“அரக்கோணம் போய் அங்கிருந்து பஸ்ஸில் 35 நிமிடம் சென்றால் நான் வேலை செய்யும் கம்பெனி வரும். தினமும் இப்படித்தான் சென்று வருகிறேன்” என்றார்.

“தினமும் ரொம்ப தூரம் சென்று வருகிறீர்கள். சிரமம்தான். எப்போது வீட்டுக்குத் திரும்புவீர்கள்?” அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

“நாலரை மணிக்கு கம்பெனியிலிருந்து கிளம்பினால், பஸ் பிடித்து, இரயிலைப் பிடித்து மறுபடி மின்சார இரயிலைப் பிடித்து வீட்டுக்குப் போய் சேர, இரவு 9.30 மணி ஆகிவிடும்” என்றார்.

“அலுப்பாயிருக்காதா?” என்றேன் சற்றே ஆச்சரியமாய். “பழகிவிட்டது” என்றார். “அங்கேயே வாடகைக்கு ஒரு வீடு பார்த்து தங்கினால் இவ்வளவு சிரமம் இருக்காதல்லவா?” என்றேன். “இப்போது இருப்பது சொந்த வீடு. இந்த வசதி வேறு இடத்தில் கிடைக்காதே!” என்றார்.

தினமும் ஐந்து மணி நேரம் பயணித்து, எட்டு மணி நேரம் வேலை செய்து மறுபடி ஐந்து மணி நேரம் பயணித்து வீடு திரும்பி, சாப்பிட்டு தூங்கி(! நேரம் எங்கே இருக்கிறது?), என்ன மாதிரியான ஒரு அவசர வாழ்க்கை. வேறு சிந்தனைக்கோ, விளையாட்டுக்கோ எப்படி நேரம் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்க்கைத்தரம் கொஞ்சமாவது முன்னேறுமா? அதற்கு முயற்சி செய்வதற்காவது வாய்ப்பிருக்கிறதா?

“சார்” அவருடைய குரல் என் சிந்தனையை கலைத்தது. நிமிர்ந்து பார்த்தேன்.

“அரக்கோணம் வந்தால் என்னை எழுப்புகிறீர்களா?” என்று கேட்டு விட்டு என்னுடைய பதிலுக்குக்கூட காத்திராமல் தூங்க ஆரம்பித்து விட்டார். இரயில் புறப்பட்டது.

இந்த அனுபவம் நமது சிந்தனையைத் தூண்டியது.  பணம் சம்பாதிக்க வேண்டி மனிதன் எப்படிப்பட்ட சிரமங்களையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது?. இவருடைய தினசரி வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன? இரயிலுடன் சேர்ந்து நமது எண்ணங்களும் ஓடியது.

நாம் எப்படி நமது நேரத்தை செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கைத்தரம் அமைகிறது அல்லவா? அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: