இயற்கையின் அதிசய நெட்வொர்க்கை புரிந்து கொள்வோம்

27 ஜூலை

கவிஞர் கடிவேலு நம்மிடம் கொடுத்த கவிதையை படித்துப் பார்த்து விட்டு, இந்தக் கடிவேலு, கவிஞரா அல்லது சித்தரா என்று திகைப்படைந்தோம் அல்லவா?. அதற்குக் காரணம் இருக்கிறது. சித்தர்கள் எழுதிய பாடல்களைப் படித்தோமென்றால், மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமான ஒரு அர்த்தமும், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் வேறு ஒரு அர்த்தமும் வரும்.

கவிஞர் கடிவேலு எழுதிய கவிதையும் அதேபோல் சாதாரணமாகப் பார்த்தால் பூ மலர்வதையும், வண்ணத்துப் பூச்சி அதில் தேன் குடிக்க வருவதையும் சொல்லியிருப்பது இயற்கையான ஒரு விஷயத்தை சொல்வது போலத் தோன்றும். ஆனால் கொஞ்சம் யோசித்தோம் என்றால் இயற்கையின் அதிசயத்தை விளக்கும் விதத்தில் இன்னொரு அர்த்தமும் இருக்கும். அதனால்தான் நமக்கு அத்தகைய சந்தேகம் தோன்றியது.

ஆனால் சித்தர்கள் எப்போதும் பணத்தை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆசையையும் அறவே ஒழித்தவர்கள் அவர்கள். இந்த கடிவேலுவோ அதில்தான் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். எனவே இவர் ஒரு தெளிவு பெற்ற கவிஞர்தானே தவிர வேறு எதுவுமில்லை என்ற முடிவுக்கு நாம் வந்தோம். தான் உணர்ந்து கொண்ட விஷயத்தை சொல்வதின் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவ்வளவுதான். இப்போது அவர் எழுதிய கவிதைக்கு வருவோம்.

ஒரு செடியை எடுத்துக் கொண்டால், அதற்கு உயிர் உள்ளது. அதனால் வாய்பேச முடியாது. இடம் விட்டு இடம் அசைய முடியாது. ஆனாலும் அதுவும் தன்னுடைய இனத்தை இந்த பூமியில் விருத்தி செய்வதற்கு இயற்கை அதற்கு உதவி செய்கிறது. விதையிலிருந்து செடி முளைத்து வளர்ந்து, தான் இருக்கும் நிலையிலேயே ஒரு தவம் செய்கிறது. அதன் பயனாக அது கிளை பரப்பி வளர்ந்து அதில் மொட்டுக்கள் உருவாகி, அது பூக்களாக மலர்ந்து மணம் பரப்புகிறது.

அந்த மலர்களுக்கு மணம் எப்படி வருகிறது? அழகான நிறம் எப்படி கிடைக்கிறது? அதில் உள்ள விதவிதமான டிசைன்களை யார் வரைகிறார்கள். அதில் இனிக்கும் தேன் எப்படி சுரக்கிறது? யாருக்காவது பதில் தெரியுமா? யாரும் வெளியிலிருந்து சென்ட் அடித்து, டிசைன்களை வரைந்து கொடுக்கவில்லை. கடவுள் சக்தி (அல்லது எல்லையில்லாத இயற்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம்) தன்னுடைய கருணையினால் அதற்கு அனைத்தையும் அளிக்கிறது. அது எதற்காக?

அதனால் என்ன பயன்? இயற்கை எதையும் காரணமில்லாமல் செய்வதில்லை. அந்த மலரில் உள்ள தேனை விரும்பி ஏதாவது ஒரு வண்டோ அல்லது வண்ணத்துப் பூச்சியோ வருகிறது. அதற்கு அதுதான் உணவு. ஏதோ ஓரிடத்தில் பூ மலர்ந்திருப்பதை அது எப்படி தெரிந்து கொள்கிறது? இந்த இடத்தில் தேன் நிறைந்த ஒரு பூ மலர்ந்திருக்கிறது, தேன் குடிக்க வா! என்று யாரவது வண்ணத்துப் பூச்சிக்கு தகவல் அனுப்புகிறார்களா? அல்லது அந்த மலர்தான் வெப்சைட்டில் விளம்பரம் செய்கிறதா? ஈமெயில் அனுப்புகிறதா? எதுவுமேயில்லை.

ஆனால் எங்கிருந்தோ வண்ணத்துப் பூச்சி வருகிறது. ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான வண்ணத்துப் பூச்சி வருகிறது. பூ எப்படி வேறு வேறு நிறங்களில், வேறு வேறு மணங்களில் மலர்ந்து இருக்கிறதோ, அது போல வண்ணத்துப் பூச்சியும் வேறு வேறு நிறங்களில்,  வேறு வேறு அளவுகளில் வருகிறது. ஒரு வகை பூவில் உள்ள தேனை ஒரு வகை வண்ணத்துப் பூச்சிதான் அருந்தும். வேறு வகையான பூவில் இருக்கும் தேனை அது விரும்பாது. இதுதான் இயற்கையின் அற்புதமான விளையாட்டு.

அப்படி ஒரு பூவில் ஒரு வண்ணத்துப் பூச்சி தேனருந்தும் போது அந்தப் பூவில் உள்ள மகரந்தம் அந்த வண்ணத்துப் பூச்சியின் கால்களில் சிதறி ஒட்டிக் கொள்ளும், அப்படியே அது இன்னொரு மலரில் தேன் குடிக்க அமரும் போது அங்குள்ள மகரந்தத்துடன் கலந்து மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால் அந்த பூவின் இனம் வளர வழி ஏற்படுகிறது. வண்ணத்துப் பூச்சி பூவின் இனம் நன்றாக விருத்தியாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதைச் செய்வதில்லை. எல்லாம் தானாக நடக்கிறது.

அதேபோல் வண்ணத்துப் பூச்சி, அதற்கு முன்னால் லார்வா என்னும் புழுவாக இருந்து, ப்யூப்பா என்ற நிலையை அடைந்து, பிறகு அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது. புழுவாக இருக்கும்போது அதற்கு வாய் மட்டுமே இருக்கும். இடம் விட்டு இடம் ஊர்ந்துதான் செல்லும். பின்னர் தன்னைச் சுற்றி கூடு கட்டிக்கொண்டு சாப்பிடாமல் மௌனமாகத் தவம் இருக்கும். அப்போது அதற்கு ஞானம் பிறக்கிறது. அதன் காரணமாக அதற்கு அழகான வடிவத்தில், நிறத்தில் இறக்கை முளைக்கிறது. மூன்றாவது அறிவு மலர்கிறது. பறக்கும் ஆற்றல் பெறுகிறது.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதே வண்ணத்துப் பூச்சி புழுவாக இருக்கும்போது அழகற்றதாக, செடிகளில் உள்ள இலைகளை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கும். அதே புழு வண்ணத்துப் பூச்சியாக மாறும் போது, பறக்கும் ஆற்றல் பெறும் போது மறுபடியும் இலையை உண்பதில்லை. ஒவ்வொரு பூவாக பறந்து சென்று அதிலுள்ள தேனை சுவைக்கிறது. சுதந்திரமாக பறந்து திரிகிறது. ஞானம் பெற்ற வண்ணத்துப் பூச்சி, ஞானம் பெற்றதனால் மலர்ந்த பூவைத் தேடிப் போய் தேனை அருந்துகிறது. இதுதான் இயற்கையின் அதிசயமான நெட்வொர்க்.

மனிதனும் அப்படித்தான். எந்த அளவுக்கு அவனுடைய மனோபாவம் இருக்கிறதோ, அத்தகைய மனிதனோடு மட்டுமே அவனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அடுத்தடுத்து அறிவு மலர்ச்சி ஏற்பட ஏற்பட, தன்னைப் போல் அறிவு மலர்ச்சி பெற்ற மனிதனைத்தான் தேடுவான். சாதாரண மனிதனோ, புழு இலையைத் தேடிப் போய் தின்பது போல், தன்னை ஒத்த மனிதனுடனேயே சேர்ந்து வாழ்ந்து துன்பத்தில் உழன்று கொண்டு காலத்தை கழிப்பான். ஆனால் அறிவு மலர்ச்சி பெற்ற மனிதன் சுதந்திரமானவனாக, நோய் நொடியற்றவனாக மகிழ்ச்சியாக வாழ்வான்.

தன்னுடைய கவிதையிலே இத்தகைய ஒரு விஷயத்தை புரிய வைத்த கவிஞர் கடிவேலுவை பாராட்டுவோம். நாமும் இயற்கையைப் புரிந்து கொள்வோம். தவமிருப்போம். ஞானம் பெறுவோம். எல்லாவிதமான தளைகளிலிருந்தும் சுதந்திரம் பெறுவோம். இயற்கையின் அற்புதமான அதிசய நெட்வொர்க்கை உணர்வோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: