வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம்

28 ஜூன்

முந்தின இடுகை ஒன்றில் காய்கறி வாங்குவது போல் தங்க நகைகளை ஒருவர் வாங்குவார் என்றும், அதை உறவினர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் பரிசளித்து விடுவார் என்றும், அவரைப் பார்க்க வேண்டுமென்றால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை பாரிமுனையில் உள்ள மண்டபத்திற்கு வரவேண்டும் என்று கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா? ஞாபகமில்லாதவர்கள் மீண்டும் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? இடுகையை படித்துவிட்டு வரவும்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கவிஞர் கடிவேலு போன் செய்து ஞாபகப்படுத்தினார். இன்று கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், அதனால் சீக்கிரமே வந்துவிடும்படியும் அறிவுறுத்தினார்.

நானும் ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பினேன். அங்கு போய்ச் சேர்ந்தபோது டிக்கட் கொடுக்கும் இடத்திலிருந்து மெயின்ரோடு வரை க்யூ நின்றிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருப்பதால் வரிசையில் நின்று டிக்கட் வாங்கி உள்ளே போய் விடலாம் என்று வரிசையில் நின்றேன்.

இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. வரிசை பாதிதான் நகர்ந்திருந்தது. மேலும் மேலும் ஆட்கள் வந்து க்யூவில் நின்றார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே டிக்கட் தீர்ந்துவிட்டது என்று சொல்லி, வெளி கேட்டை மூடிவிட்டார்கள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! இவ்வளவு கூட்டமா? இத்தனைக்கும் இது புதிதாக ரிலீஸான ரஜினிகாந்த் அல்லது கமலஹாசன் படமோ, வேறு சினிமாவோ, டிராமாவோ அல்லது மியூசிக் பார்ட்டியோ இல்லை. யாரோ ஒருவர் மேடையில் தோன்றி பேச இருக்கிறார். அதை மற்றவர்கள் கேட்க போகிறார்கள். அதற்கா இவ்வளவு கூட்டம்? நிறையப் பேருக்கு டிக்கட் வேறு கிடைக்கவில்லை. என்னதான் விஷயம்?

என்ன செய்வது? திரும்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே வராந்தாவில் இருந்து கவிஞர் கடிவேலு என்னைப் பார்த்து விட்டார். செல்போனில் கூப்பிட்டு பக்கத்தில் வருமாறு அழைத்தார். அவரிடம் இன்னொரு டிக்கட் இருப்பதாகவும், அதை அங்கிருந்து போடுவதாகவும் எடுத்துக்கொண்டு உள்ளே வரும்படியும் சொன்னார்.

மண்டபத்தின் வெளி வராந்தா, தரையிலிருந்து சுமார் ஆறு அடி உயரத்தில் இருந்தது. லானில் இருந்த மரம் செடி கொடிகளைத் தாண்டி வராந்தாவின் வெளிப்புறச் சுவருக்கு அருகில் சென்றேன். கவிஞர் கடிவேலு டிக்கெட்டை என்னை நோக்கி வீசினார். அப்பாடா, ஒருவழியாக டிக்கெட் கிடைத்துவிட்டது.

ஆனால் நுழைவு வாயிலுக்கு அருகில் சென்றபோதுதான் இன்னொரு பிரச்சினை இருப்பது தெரிந்தது. என்னைப்போலவே டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு நிறையப்பேர் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காரணம் உள்ளே இருக்கை அனைத்தும் நிரம்பி விட்டதாம். உட்கார இடமில்லையாம்.

நிகழ்ச்சிவேறு ஆரம்பித்து விட்டார்கள். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் உட்கார இடமில்லையென்றாலும் பரவாயில்லை நின்று கொண்டாவது நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்று சமாதானப்படுத்தியபின் ஒருவழியாக கதவை திறந்து ஒவ்வொருவராக உள்ளே விட்டார்கள். நானும் உள்ளே நுழைந்தேன். மண்டபத்தினுள் நடக்கும் பாதையில் கூட சிலர் உட்கார்ந்திருந்தார்கள். கதவுக்கருகில் ஒரே கூட்டம். மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் நல்ல நகைச்சுவை உணர்வுள்ள பேச்சாளர் போலும். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் கூட்டம் ஆர்ப்பரித்தது. சிரிப்புச் சத்தம் அலை மோதியது.

ஒவ்வொரு இருக்கையாகத் தேடிக்கொண்டே சென்றேன். எங்காவது ஒரே ஒரு இடமாவது காலியாக இருக்குமா? என் முயற்சி வீண் போகவில்லை. கடைசி வரிசைக்கு முந்தின வரிசையில் கடைசியாக ஒரு இருக்கை காலியாக இருந்தது. சாதாரணமாகப் பார்த்தால் அது காliலியாக இருப்பதே தெரியாது. இல்லாவிட்டால் இன்னேரம் அது ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். எனக்காகவே காலியாக இருந்தது போலும் என்று எண்ணி, கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அதில் சென்று அமர்ந்தேன்.

மேடையில் பேசுபவர் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சிலிருந்து ஒரு விஷயம் புரிந்தது. ஒவ்வொருவரும் ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அவர் விளக்கிக் கொண்டிருந்தார். அதாவது பணத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.

பேச்சின் நடுவே கூட்டத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். அதாவது குடும்பத்தில் கணவன் மனைவி இடையிலோ அல்லது மற்றவர்களுக்கு இடையிலோ பிரச்சினை எதனால் வருகிறது என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.

கூட்டத்தில் இருப்பவர்கள் `பணம் பணம்’ என்று கத்தினார்கள். உடனே அவர், “கரெக்ட். சரியாகச் சொல்லிவிட்டீர்கள்” என்றார்.

மேலும் தொடர்ந்து அவரே “கொஞ்சம் விபரமாகப் பார்ப்போம். அதாவது கணவன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்து, மனைவியைப் பார்த்து கத்துகிறான்.

`என்ன இது, எங்கே பார்த்தாலும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டாக இரைந்து கிடக்கிறது. இதையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்து வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டாயா?’

இதைக் கேட்டதும் பதிலுக்கு மனைவியும் கத்துகிறாள்.

`ஆமாம், இவ்வளவு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய முடியும்? போன மாதம் நான்கு லட்ச ரூபாய் கொண்டு வந்தீர்கள். அதையே செலவழிக்க முடியவில்லை. இந்த மாதம் ஐந்து லட்ச ரூபாய் கொண்டு வந்திருக்கிறீர்கள். நான் என்ன செய்வது. அதனால் அப்படித்தான் வீடு பூராவும் இரைந்து கிடக்கும். வேறு ஏதாவது பேசினீர்கள் என்றால் என் அம்மா வீட்டுக்கு போய் விடுவேன்’.

இப்படித்தான் பணத்தினால் குடும்பத்தில் பிரச்சினை வருகிறது, இல்லையா?” என்று கேட்டார். கூட்டத்தில் சிரிப்பலை பரவியது. அவர் சொன்ன விதத்தில் அந்தக்காட்சி அப்படியே கண் முன்னால் ஓடியது.

அவர் மறுபடி கேட்டார். “சொல்லுங்கள் இப்படியா குடும்பத்தில் பிரச்சினை வருகிறது?”

“இல்லை, இல்லை” என்று கூட்டம் ஆர்ப்பரித்தது. உடனே அவர் மேலும் தொடர்ந்தார்.

“இல்லைதானே. ஆகவே பணத்தினால் குடும்பத்தில் பிரச்சினை வருவது உண்மைதான். ஆனால் அது பணம் பற்றாக்குறையால்தான் வருகிறது. சரிதானே?”

“ஆமாம், ஆமாம்” கூட்டத்திலிருந்து ஒரே ஆரவாரம்.

Advertisements

ஒரு பதில் to “வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம்”

Trackbacks/Pingbacks

  1. கவிஞர் கடிவேலுவின் விளக்கம் - இனிய இணைய இணைப்புகள் - இலவசம் - ஓகஸ்ட் 4, 2012

    […] கருத்தரங்கத்தில் நடந்தவற்றை கடந்த இடுகைகளில் விவரித்த விதம் நன்றாக இருந்ததாக […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: