பணம் உங்களைத் தேடி ஓடி வரட்டும்!

16 ஜூன்

கவிஞர் கடிவேலு கவிதை ஒன்றை ஈமெயிலில் அனுப்பினாரல்லவா? அதற்கு விளக்கம் கேட்கப்போய்த்தான் இடையில் குறுக்கிட்டு நம்மை கேள்வி கேட்டதோடு மட்டுமில்லாமல், தன் நண்பரைப் பற்றி ஒரு நம்பமுடியாத தகவலையும் சொன்னார்.

மீண்டும் அவருடைய கவிதையைப் பற்றி பேச்சைத் திருப்பினேன்.

“கவிஞரே, பணத்தின் மீது ஆசைப் பட வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீரோ பணத்தின் மீது ஆசை வைக்காதே என்கிறீர். முரண்பாடாக இருக்கிறதே!” என்றேன்.

விரும்பிப் போனால் விலகிப் போகும்.

விலகிப் போனால் விரும்பி வரும்

என்று சொல்லி நீர் கேட்டதில்லையா? அது பணத்துக்கும் பொருத்தமானதுதான்.

கவிஞர் கண்ணதாசன் கூட ஒரு பாட்டில் பணத்தைப் பற்றிச் சொல்லும்போது

நீ தேடும்போது வருவதுண்டோ – விட்டுப்

போகும்போது சொல்வதுண்டோ

என்று எழுதியிருப்பார்” என்றார் கவிஞர் கடிவேலு.

“ஆனால் இந்த உலகமே பணத்தைச் சுற்றித்தானே நடக்கிறது. குடும்பம், தொழில், உறவு, நட்பு என எல்லாவற்றுக்கும் பணம்தானே அடிப்படை. அதை விரும்பாமல் எப்படி எல்லாம் சரியாக நடக்கும்?” என்று கேட்டேன்.

“பணம் அடிப்படை ஆதாரம் என்பது உண்மைதான். ஆனால் அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வித்தியாசமே இருக்கிறது” என்றார் கவிஞர்.

“எப்படி சொல்கிறீர்கள்?”

“ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் என்ன?” என்று கேட்டார்.

“நீங்களே சொல்லுங்கள்”

“ஏழை பணத்தின் மீது ஆசை வைக்கிறான். பணக்காரன் பணம் தன்னிடம் வந்து சேர்வதற்குத் தேவையான வழிவகைகளை செய்து கொள்கிறான். அதுதான் வித்தியாசம்” என்றார் கவிஞர்.

“கவிஞரே, ஏழை பணத்தின் மீது வெறுப்பு காட்டுவதால்தான் அவனுக்கு பணம் வந்து சேர்வதில்லை என்று சொல்வார்கள். ஆனால் நீரோ அவன் பாசம் வைப்பதால்தான் ஏழையாக இருக்கிறான் என்று சொல்கிறீரே” என்று என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது.

அவர் சொன்னார். “விருப்பு, வெறுப்பு இரண்டுமே ஒரே குணத்தின் வேறு வேறு பக்கங்கள்தான். இன்று வெறுப்பாக இருப்பது நாளை விருப்பமாக மாறும். இன்று விருப்பமாக இருப்பது நாளை வெறுப்பாக மாறும்.”

நான் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். கவிஞர் கடிவேலு தொடர்ந்தார். “உதாரணமாக ஒரு தெர்மாமீட்டரை எடுத்துக் கொள்வோம். சூடாக இருந்தால் அதில் உள்ள பாதரசம் மேலே ஏறும், குளிர்ச்சியாக இருந்தால் கீழே இறங்கும். அதற்கு வெப்பமும் குளிர்ச்சியும் ஒன்றுதான். அதுபோல விருப்பு, வெறுப்பு இரண்டும் மனிதனுக்கு ஒன்றுதான்.”

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

கொஞச நேரம் கழித்து கவிஞரே தொடர்ந்தார்.

“அதனால் நாம் பணத்தின் மீது பாசம் கொள்ளக்கூடாது. பணம் நம்மைத்தேடி வருமாறு நாம் வழி செய்து கொள்ளவேண்டும்.” என்றார்.

“பணம் எப்படி நம்மைத்தேடி வரும்?”

“ஆங்கிலத்தில் Law of Attraction என்று கேள்விப்பட்டிருக்கிறீரா? ஈர்ப்பு விதி என்று சொல்வார்கள். அது இயற்கையின் விதி. இந்த பிரபஞ்சமே அந்த விதியின் படிதான் இயங்குகிறது.”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.

“இந்த பிரபஞ்சத்தில் எல்லோருக்கும் தேவையான எல்லாமே இருக்கிறது. எவருக்கு எது தேவையோ அதற்கான வழிமுறையை கண்டறிந்து அதை அடைவதற்குத் தேவையான நுணுக்கத்தைக் கடைப்பிடித்தோமானால் நாம் விரும்பியதை அடையலாம்.” ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை விளக்க முயற்சிக்கிறார் என்று புரிந்தது. இடையில் குறுக்கிடாமல் கூர்ந்து கவனித்தேன்.

“உதாரணமாக ஒரு ரேடியோவை எடுத்துக் கொள்வோம். நாம் ரேடியோவில் சினிமாப் பாடலைக் கேட்கிறோம் அல்லவா? அந்த செயல் எப்படி நடக்கிறது? அந்தப்பாடல் ஏற்கெனவே நம்மைச் சுற்றி மின்காந்த அலைகளாக பரவி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை நாம் கேட்க முடியாது. அதைக் கேட்க வேண்டுமென்றால் அந்த மின்காந்த அலைகளை ஈர்த்து அதை ஒலியலையாக மாற்றக்கூடிய ரேடியோ என்ற கருவி வேண்டும். அதில் நமக்குத்தேவையான ரேடியோ ஸ்டேஷனை ஈர்க்கக்கூடிய வகையில் ரேடியோவை சரியாக ட்யூன் செய்தால் அந்த ஸ்டேஷனில் ஒலி பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும், பாடலையும் நம்மால் கேட்க முடியும்.”

நமக்குத் தெரிந்த சாதாரண விஷயம்தான். ஆனால் அதை ஈர்ப்பு விதிக்கு உதாரணமாக கவிஞர் விளக்கும்போது ஏதோ புரிவது போலத் தோன்றியது.

“அது போல நமக்கு என்ன தேவையோ அது நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவையான வகையில் நம்மை தகுதிப் படுத்திக்கொண்டால் அதை நம்மை நோக்கி ஈர்க்க முடியும். பணம் மட்டுமல்ல, கார், நல்ல வேலை அல்லது பிடித்த தொழில், வசதியான வாழ்க்கை எதுவானாலும் நம்மால் பெற முடியும்.”

“மேலும் மேலும் கேட்க ஆவலாக இருக்கிறது, கவிஞரே” என்றேன்.

“இன்றைக்கு இவ்வளவு போதும். ஒரே நாளில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட முடியாது. இன்னொரு நாள் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: