நண்பரின் மூணாறு சுற்றுலா

30 மே

அய்யா, நீங்கள் எங்காவது உல்லாச சுற்றுலா சென்றதுண்டா? அதுவும் இந்த 110 டிகிரி கோடை வெயிலில் இருந்து தப்பிக்க எங்காவது கோடை வாசஸ்தலத்துக்கு சுற்றுலா சென்று வந்தால் சுகமாக இருக்கும்தானே!

அப்படித்தான் நமது நண்பர் கோபு அவர்கள் மூணாறுக்கு சுற்றுலா சென்று வந்தார். ம்… நம்மால்தான் எங்கேயும் போக முடியவில்லை, அவராவது நல்லபடியாக சென்று வரட்டுமே என்று வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

எல்லோரும் உல்லாச சுற்றுலா சென்று விட்டு, சந்தோஷமாக திரும்புவார்கள். ஆனால் நமது நண்பர் மிகவும் அவஸ்தைப் பட்டு, நொந்து நூலாகி வந்ததாகச் சொன்னார். என்னவென்று விசாரித்தேன்.

“நீங்கள் சொன்னதுபோல் கோயம்புத்தூரில் இறங்கியே மூணாறு போயிருக்கலாம். இடையில் என்னைக் குழப்பி விட்டு அவஸ்தைப்பட வைத்து விட்டார்கள்” என்ற முன்னுரையுடன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் அந்தக் கதையை சொல்லச் சொல்ல, இந்த மனிதருக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அவர் கிளம்புவதற்கு முன்புதான் எத்தனை எத்தனை பிரச்சினைகள். சுற்றுலா செல்ல டிக்கட் எடுத்ததிலிருந்து போய் திரும்பி வரும் வரை மனிதருக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள்.

அந்த நண்பர் சுற்றுலா கிளம்புவதற்கு முன்னால் நடந்த விஷயங்களெல்லாம் என் நினைவுக்கு வந்தது. அதை நினைத்தால் சிரிப்பதா அல்லது அவர் மீது பரிதாபப் படுவதா என்று தெரியவில்லை.

ஒரு நாள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக, தான் மூணாறு போகப் போவதைப் பற்றி சொன்னார்.

“இன்றைக்கு வெயில் ரொம்ப அதிகம். இல்லையா சார்?” இது நான்.

“இன்றைக்கு வெயில் எவ்வளவோ பரவாயில்லைங்க, நேற்று, முந்தாநேற்று, இதை விட வெயில் அதிகம்.” இது நமது நண்பர்.

ஆம்! அவருடைய குணாதிசயம் பற்றி ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அதாவது, அவர் எப்பொழுதுமே மற்றவர் சொல்வதை ஆமாம் என்று ஒத்துக் கொள்ள மாட்டார். ஒவ்வொன்றுக்கும் அவர் ஒரு அபிப்பிராயம் சொல்வார். அது தான் அவருடைய வழக்கம். (ஆனால் இந்த சுற்றுலா விஷயத்தில் மட்டும் அது விதி விலக்கு.)

இது எனக்கு தெரிந்திருந்ததால் நான், “அப்படியா சார், சரிதான். இந்த வெயிலுக்கு எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று போய் வந்தால் நன்றாயிருக்கும்” என்றேன்.

உடனே அவர் பெருமை பொங்க, “நான் அடுத்த வாரம் குடும்பத்தோடு மூணாறு போகலாமென்று இருக்கிறேன். நீங்கள் எங்கும் போகவில்லையா?” என்று கேட்டார்.

“எனக்கு இப்போது வேலை அதிகம் இருப்பதால் போக முடியாது. மூணாறுக்கு எப்படி போகிறீர்கள், இரயிலிலா, பஸ்ஸிலா?”

“இரயிலில்தான் ரிசர்வ் பண்ணியிருக்கிறேன்” என்றார். அதுவரை எல்லாம் சரிதான். ஆனால் அடுத்து அவர் சொன்ன விஷயம்தான் என்னை சிரிக்க வைத்து விட்டது. அவர் சொன்னது இதுதான்.

“இரயிலில் கோழிக்கோடு வரை சென்று, அங்கிருந்து வாடகைக்கார் எடுத்துக் கொண்டு மூணாறு செல்வதற்குத் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.

கோழிக்கோடுவிற்கும் மூணாறுக்கும் என்ன சம்பந்தம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

“கோழிக்கோடு போகிறீர்களா, எதற்கு? அது இருப்பது வேறு பக்கம், மூணாறு இருப்பது வேறு பக்கம்” என்றேன்.

“இல்லையே, கோழிக்கோடு பக்கம்தானே மூணாறு இருக்கிறது. ட்ராவல்ஸில் இருப்பவன் சொன்னானே” என்றார்.

மூணாறு போக கோழிக்கோடு போக வேண்டியதில்லை. அதற்கு பதிலாக எர்ணாகுளம் போவதுதான் சரியான வழித்தடமாக இருக்கும் என்று அவரை ஒத்துக்கொள்ள வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

‘கூகுள் மேப்’ பில் கோழிக்கோடு எங்கே இருக்கிறது, கோயம்புத்தூர், எர்ணாகுளம், மூணாறு எங்கே இருக்கிறது என்று காண்பித்த பிறகுதான் ஒருவழியாக ஒத்துக் கொண்டார்.

ஆனால் ஒரு பிரச்சினை. ஏற்கெனவே கோழிக்கோடு போக ரிசர்வேஷன் பண்ணியாகி விட்டது. அதை கேன்சல் செய்து விட்டு, எர்ணாகுளம் போக வேறு டிக்கட் வாங்குவதென்றால், அது முடியாத காரியம். அதனால் இப்போது அவருடைய கவலை அதிகமாகி விட்டது.

“இப்படியாகி விட்டதே, முதலியே உங்களிடம் கேட்டிருக்கலாம். போகட்டும், தற்செயலாக இதை உங்களிடம் சொன்னதினால் இப்போதாவது விஷயம் தெரிந்ததே” என்று புலம்பினார். அவருடைய புலம்பலைக் கேட்டதினால், அவருடைய கவலையை தீர்க்க ஒரு ஐடியா சொன்னேன்.

“ஒன்று, நீங்கள் கோயம்புத்தூரில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் மூணாறு சென்று அடையலாம். அல்லது கோயம்புத்தூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு இன்னொரு இரயில் பிடித்து, அங்கிருந்து மூணாறு செல்லலாம்.” என்றேன்.

“அந்த இரயில் கோயம்புத்தூருக்கு எப்போது போய் சேரும்?” என்று கேட்டார்.

அவரிடம் இரயில் நம்பரை கேட்டு வாங்கி, இன்டர்நெட்டில் தேடி விடியற்காலை 3.50க்கு கோயம்புத்தூர் போய் சேரும் என்று சொன்னேன்.

“அய்யய்யோ, மனைவி மற்றும் குழந்தையோடு அந்த நேரத்தில் வெளியே செல்வது பாதுகாப்பானதாக இருக்காதே, என் மனைவி நன்றாகத் திட்டதான் போகிறாள்.” என்றெல்லாம் புலம்பினார்.

கோயம்புத்தூரில் இருந்து மூணாறு செல்வதற்கு கால் டாக்ஸி நம்பர்களையெல்லாம் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். அவர் போன் போட்டு விசாரித்து விட்டு ரூ3800/- ஆகுமென்று சொல்கிறார்கள். பேசாமல் பஸ் ஏதாவது கிடைத்தால் அதில் போவதுதான் சரியாக இருக்கும் என்றார்.

கிளம்பும் நாள் வரை மூணாறு எப்படி போகலாம் வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் சென்னை வாலாஜா ரோட்டிலுள்ள Kerala State Tourist Information Center க்கு போன் போட்டு விசாரித்தபோது கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வரை பஸ்ஸில் சென்று, பின் அங்கிருந்து மூணாறு செல்லலாம் என்று சொன்னார்கள். அதை அவரிடம் தெரிவித்து நல்லபடியாக போய் வாருங்கள் என்று வாழ்த்தினேன். நண்பர் அன்று இரவு கிளம்புவதாகச் சொன்னார்.

நான் அன்று மாலை வீட்டுக்குச் சென்று டி.வி. பார்த்தபோது, பெட்ரோல் விலை ரூ7.50 உயர்ந்து விட்டதாகவும், அதனால் அடுத்த நாள் கேரளாவில் பந்த் என்றும், பேருந்துகளோ, டாக்ஸியோ, ஆட்டோவோ ஓடாது என்றும் செய்தியில் அறிவித்தார்கள்.

அய்யய்யோ! நமது நண்பர் எப்படி மூணாறு சென்று சேரப்போகிறாரோ? என்று கவலை ஏற்பட்டது.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: