வெண்பாவின் சுவை – 2

2 மார்ச்

தமிழில் உள்ள கவிதைகளை நாம் படித்து உணரும்போது அதில் உள்ள சில சொற்கள் பல வகையான அர்த்தத்தைக் கொடுப்பதைக் காணலாம். இதை சிலேடை என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் புரிந்து அதன் சுவையை பருகும்போது தமிழின் பெருமையை நம் முன்னோர்கள் சிறப்பித்துக் கூறுவதற்கான காரணம் தெரியும்.

கீழே தரப்பட்டுள்ள இந்த நேரிசை வெண்பா அதுபோல் பல பொருள்களைத் தருவதை இங்கு பார்ப்போம்.

 கண்ணில்பொய் சேர்த்து கவர்ந்திடும் தன்மையால்

மண்ணில்நாம் ஏற்றகட மையென்று – எண்ணியே

மைகொண்ட பேர்களைக் கண்டால் அனிச்சையாய்

கைநீண்டு போகிறது பார்

இந்தப் பாடலை நேரடியான பொருளில் அர்த்தம் கொண்டால் கண்களில் கள்ளத்தனத்துடன் மற்றவர் பொருட்களைக் களவாடும் மனிதரைக் கண்டவுடன் அவரைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு அனிச்சையாகவே கை நீண்டு செல்கிறது என்று பொருள் தரும்.

அதாவது திருடர்கள் ஒருவகையான திருட்டு முழியுடன் நடமாடுவதால் அவர்கள் களவாடும்போது அவர்களைப் பிடிக்க காவலரோ அல்லது பொதுமக்களோ அது தமது கடமை என்று எண்ணி கை நீட்டுவார்கள் என்று அர்த்தம். மை என்ற கொல்லுக்கு குற்றம் என்றும் ஒரு பொருள் உண்டு.

வேறு பொருள்:

இதையே வேறு வகையிலும் பொருள் கொள்ளலாம். அதாவது விலையுயர்ந்த பொருளை வைத்திருப்போர் கண்களில் ஒருவிதமான பதட்டம் இருக்கும். அதை மறைக்க பொய்மையுடன் நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை திருடர்கள் எளிதாக அறிந்து கொண்டு அவர்கள்தான் தம்முடைய இலக்கு என்று உணர்ந்து சம்யம் பார்த்து திருடுவதற்கு கை நீட்டுவார்கள் என்றும் அர்த்தம் கொல்ளலாம்.

மற்றொரு பொருள்:

இதையே ஒரு ஆசிரியர் தவறு செய்த மாணவனைக் கண்டு பிடிப்பதற்கும் ஏற்ற பொருளாகக் கொள்ளலாம்.

இன்னொரு பொருள்:

இந்த வெண்பாவின் முதல் இரண்டு சீர்களை எடுத்துக் கொள்வோம்.  கண்ணில்பொய் சேர்த்து: சேர்த்து என்பது முடிவு பெறாத ஒரு சொல்லாகும். அத்துடன் கொண்டது அல்லது கொள்வது என்று இன்னொரு சொல் சேரும்போது அது முழுமை பெறும். அதாவது சேர்த்துக் கொண்ட அல்லது சேர்த்துக் கொள்ள என்பது போல்/ இந்த வெண்பாவில் அப்படி ஒரு சொல் மூன்றாவது அடியில் முதல் சீர் மைகொண்ட என்று வருகிறது. எனவே கண்ணில்பொய் சேர்த்து என்பதை கண்+இல்+பொய் என்று பிரித்து. அந்த சொற்களுடன் மை சேர்த்தால்

கண்மை கொண்ட பேர்களை என்றும்

இல்மை அதாவது இன்மை கொண்ட பேர்களை என்றும்\

பொய்மை கொண்ட பேர்களை என்றும் அர்த்தம் தரும்.

இதற்குரிய பொருள் என்ன என்று பார்ப்போம்:

அப்படிப்பட்டவர்கள் (கண்மை, இன்மை, பொய்மை கொண்டவர்கள்) எளிதில் நமது கவனத்தைக் கவர்கிறார்கள். அப்படிக் கவர்பவர்களைக் கண்டவுடன் அது நம் கடமை என்று எண்ணி அவர்களை நோக்கி நம்மை அறியாமலே கை நீட்டுகிறோம் என்பது (காரணம் வேறு வேறு என்றாலும்) இதன் பொருள்.

கண்மை – கண்களில் மை தீட்டிய பேர்களைக் (அது குழந்தையாகவோ அல்லது குமரியாகவோ இருக்கலாம்) காணும் போது அவர்களைக் கட்டி அணைத்துக் கொஞ்சுவதற்கு கை நீள்கிறது என்று பொருள்படும். குழந்தை என்றால் பிரச்சினை இல்லை, குமரி என்று சொல்லும்போது அது மனைவி அல்லது காதலி என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அப்படிச் செய்பவரைத் தண்டிப்பதற்காக தானாக கை நீண்டுவிடும் என்று அர்த்தம் மாறிவிடும்.

இன்மை – தன்னிடம் இல்லை என்பதால் இன்னல் பட்டு அதை தீர்க்குமாறு கேட்பவர்களுக்கு தானமாகவோ அல்லது உதவியாகவோ பொருள் கொடுப்பதற்கு கை நீள்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.

பொய்மை – பொய் சொல்பவரை அவருடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும். அப்படிப்பட்டவரைக் கண்டால் அவரைப் பிடிக்க தானாகவே கை நீண்டு விடும் என்று பொருள்படும். (அலுவலகத்தில் உயர் அதிகாரி நம் அருகில் வரும்போது அவருடன் கை கொடுப்பது அப்படித்தான் தோன்றுகிறது என்று சிலர் இதன் பொருளாக எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

பின் குறிப்பு:

சரி…. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் இந்தப் பாடல் எந்த இலக்கியத்தில் அல்லது சங்ககாலப் பாடலில் வருகிறது என்று கேட்பவர்களுக்கு….

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க… சும்மா நான்தான் எழுதிப் பார்த்தேன்.

Advertisements

கடவுள் வாழ்த்து-2

15 பிப்
மனம்கலங்கி நொந்து இனிஎன்தான் செய்வோம்
எனஇருந்த காலத்தில் தன்னை – மனம்உருகி
வேண்டிடும் பேர்களுக்கு இன்னலை நீக்கியே
ஆண்டவன் நல்அருள்புரி வான்

பொருள்:

வாழ்க்கையின் ஓட்டத்தில் மனிதன் பல இன்னல்களை சந்திக்கிறான். தன்னால் முடிந்த அளவு அவற்றோடு போராடுகிறான். ஒரு கட்டத்தில் இனிமேல் தன்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வருகிறது. அதனால் கலங்கி நிற்கிறான். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே வழி இறைவனிடம் சரணடைவதுதான். அப்படி தன்னை நாடி மனம் உருகி வேண்டும் போது அவனுடைய துன்பத்தை தீர்ப்பதற்கு இறைவன் அருள் புரிகிறான். இது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் ஓர் அற்புத அனுபவம் ஆகும்.

 

கடவுள் வாழ்த்து

9 பிப்
கண்ணன் அருளிய காவியம் செய்யவே
திண்ணிய தந்தம் ஒடித்தவன் – பன்னிரு
வேத முதலவன் மைந்தன் கணபதி
பாதம் பணிந்துவந் தேன்.

பொருள்:

இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் மாமுனி வியாசரால் இயற்றப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. இறைவனால் உரைக்கப்பட்ட அந்தக் காவியத்தை எழுதுமாறு விநாயகரைக் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அவர் தனது தந்தத்தையே ஒடித்து அதை எழுத்தாணிக்கி எழுதினார் என்றும் புராணக்கதை சொல்கிறது. பகவான் கண்ணன் அருளிய பகவத் கீதை அந்தக் காவியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழில் எழுதப்பட்ட பன்னிரண்டு திருமறைகள் முதல்வனாகக் கொண்டாடும் சிவபெருமானின் மைந்தனான விநாயகர் முழுமுதற் கடவுளுமாவார். இது போன்று இன்னும் பல சிறப்புக்களைப் பெற்ற கணபதியின் பாதத்தை வணங்கி இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

குறிப்பு:

பாதம் பணிந்து வந்தேன் என்று முடியும் இந்த வெண்பா, சாதாரணமாக ஏதோ கடமைக்காக விநாயகரை வணங்கி வந்தேன் என்பது போல அர்த்தம் கொடுக்கும். ஆனால் வார்த்தைகளைப் பிரித்து பொருள் கொண்டால் பாதம் பணிந்து உவந்தேன் என்று பொருள் தரும். அதாவது விநாயகரின் ஆசி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தேன் என்ற பொருளின் அர்த்தம் மறைந்திருக்கிறது.

வெண்பாவின் சுவை

7 பிப்

தமிழார்வம் மிக்க அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களைத் தேடிப் படித்து பொருளுணர்ந்து அதை மற்றவர்களுக்கு விளக்குவதுண்டு. அது போல் நிறைய தளங்கள் இணையவெளியில் காணக்கிடைக்கின்றன. அதனைப் படித்து உணரும்போது தமிழின் சுவையை பருக முடிகிறது. தமிழை  அமிழ்து என்று சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் இலக்கியத்தில் நிறைந்துள்ள பா வகைகள் படிப்பதற்கும் சுவைப்பதற்கும் இனிமையானவை. அந்தந்த காலகட்டங்களில் இயற்றப்பட்ட நூல்களின் மூலம் அன்றைய தமிழ்ச்சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், வரலாற்றுச் சிறப்பையும் கூட அதன் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக கி.பி 250 முதல் கி.பி 500 வரையிலான காலகட்டங்களில் வாழ்ந்த மக்களைப் பற்றியும் தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களது ஆட்சியைப் பற்றியும் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவைகள் மிகக்குறைவாகவே கிடைத்திருப்பதாக வரலாற்றாய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால் அக்காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள பதினென்கீழ்க்கணக்கு போன்ற நூல்களே அன்றைய வரலாற்றை ஓரளவு புரிந்துகொள்ள உதவுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற பல நூல்களும் பதினென்கீழ்க்கணக்கு வகையில் அடங்குபவையே. பெரும்பாலும் இந்நூல்கள் வெண்பா வகையைச் சார்ந்தவையாகவே காணக்கிடைக்கின்றன. வெண்பா என்பது இலக்கண வரையறைக்கு உட்பட்டு இயற்றப்படும் பா வகையாகும்.

வெண்பாவில் இயற்றப்பட்ட கவிதைகள் இயல்பாகவே என்னை ஈர்க்கிறது. அதற்கு ஈரடி வெண்பா வகையைச் சார்ந்த திருக்குறள் ஒரு உதாரணம். அதன் சுவையும் கருத்தும் நாம் தமிழ் மண்ணில் வாழ்கிறோம் என்ற பெருமிதத்தை ஏற்படுத்துவது மறுக்க முடியாதது.

அந்த ஆர்வமே நாமும் அதுபோல வெண்பா வடிக்கலாமே என்று முயற்சிக்க வைக்கிறது. அத்தகைய முயற்சியில் நானும் ஒரு சில வெண்பாக்களை வடித்துப் பார்க்கிறேன். அதில் குறையிருந்தால் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் பொருத்தருள வேண்டுகிறேன். அத்தகைய குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதனைத் திருத்திக் கொள்ளவும் ஆயத்தமாயிருக்கிறேன்.

வினையறி யாச்சிறு பிள்ளை விளையாட்டாய் நானும்
நினைத்து வடிவமைத்த வெண்பா இதுவே – தினைப்புலத்து
வள்ளிநாதன் காத்திடுவான் என்றே; குறைசொல்லும் கற்றறிந்தார்
கள்ளிருக்கும் பானைதான் ஓட்டைஎன் பார்

பொருள்:

தமிழை நமக்களித்த முருகனை வழிபட்டு, சிறு குழந்தை விளையாட்டுப் போல வெண்பா வடிக்க முயல்கிறேன். இதில் குறையிருக்கிறது என்று கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் சுட்டிக்காட்டினால் அது தமிழின் குற்றமல்ல, நான் அறியாமல் செய்த பிழையே என்பதைப் புரிந்து கொள்வேன்.

மனித நேயம்

16 ஜன

சிறுகதை

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (14-01-2018) நான் எழுதிய மனித நேயம்’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் மனித நேயம்

திண்ணைக்கு நமது நன்றி!

மற்ற கதைகளைப் படிக்க இந்த தலைப்பை சொடுக்கவும் கதைகள்

பொங்கல் வாழ்த்து 2018

13 ஜன

அனைவருக்கும்

இனிய

பொங்கல் திருநாள்

வாழ்த்துக்கள்

பாவக்கணக்கு

11 ஜன

சிறுகதை

“என்னங்க, ஆபீஸிலிருந்து வரும்போது இரண்டு நாளைக்கு காய்கறி வாங்கிட்டு வந்திடறீங்களா?”

“ஏன் இன்னிக்கி நீ மார்க்கட்டுக்கு போகலியா”

“எனக்கு உடம்பு முடியலீங்க. புதன்கிழமை போய் வாங்கிக்கிறேன். இன்னிக்கு நீங்க வாங்கிட்டு வந்துருங்க”

மாதத்தில் இப்படி இரண்டு தடவையாவது கணேசனுக்குப் போன் பண்ணுவாள் அவருடைய மனைவி கமலா. வீட்டில் இவர்கள் இருவர் மட்டும்தான். ஒரே மகளுக்குப் போன வருடம்தான் திருமணம் ஆனது.. வெளியூரில் இருக்கிறாள்.

ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகிற வழியில், ஜெயா மெடிக்கல்ஸ் பக்கத்தில் ஒரு வண்டியில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருப்பான் ரங்கன். அவனிடம்தான் கணேசன் எப்போதும் வாங்குவார். முக்கியமாக முருங்கைக்காய் சதைப் பற்றுதலாக இருக்கும். ரிலையன்ஸில் காய் கொஞ்சம் முத்தலாக இருக்கிறதென்று கமலா சொல்வாள். பழமுதிர்சோலையில் விலை அதிகம் என்பாள்.

ரங்கன் ஒரு சாக்குப் பையிலிருந்து சாம்பார் வெங்காயத்தை ஒரு பெட்டியில் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மனைவிதான் எடை போட்டு கணக்குப் பார்த்து பணம் வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் மனதிலேயே கணக்குப் போடுவாள். சரியாக இருக்கும் கில்லாடி.

வலதுபுறத்தில் தக்காளி பளிச்சென்று இருந்தது. தக்காளி மலிவாக இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிக் கொள்ளலாம். தக்காளிச் சட்னி கமலா பிரமாதமாக வைப்பாள்.

“ஒரு தட்டு கொடுங்க”

அவள் ஒரு தட்டை நீட்டினாள். அதில் தக்காளியை எடுத்து நிரப்பினார். எடை போடுவதற்கு எடுத்துக் கொடுத்து, “சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ போடும்மா” என்றார்.

“ஐயா, சாம்பார் வெங்காயம் அரை கிலோ அம்பது ரூபா” என்றான் ரங்கன்.

“கிலோ நூறு ரூபாயா”

“அதுக்கே இப்ப டிமான்டு சார்”

“சரி கால் கிலோ கொடு போதும்” இங்கு வெங்காயமும் நன்றாக பெரியதாக இருக்கும்.

மேலும், முட்டைக் கோஸ், அவரைக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் எல்லாம் வாங்கிக் கொண்டு, “ஐந்து ரூபாய்க்கு பச்சை மிளகாய், அப்புறம் கருவேப்பிலை கொத்துமல்லி” என்றார் கணேசன்.

கணேசன் மனதிற்குள்ளேயே கணக்குப் போட்டார். தொன்னூறு ரூபாய் ஆகிறது. “சரி, எவ்வளவு ஆச்சு?” என்றார் அவளிடம்.

கடைக்கார அம்மாள் எல்லாவற்றையும் பையில் போட்டு, கணவனைப் பார்த்து, “ஏங்க, இவருக்கு எவ்வளவு ஆச்சுனு கணக்குச் சொல்லுங்க” என்றாள்.

ரங்கன் பையில் உள்ள அயிட்டங்களை வைத்து கணக்குப் பார்த்து, “மொத்தம் எண்பத்தைந்து ரூபாய் ஆகிறது” என்றான்.

ஐந்து ரூபாய் குறையாகச் சொல்கிறானே என்று மனதில் நினைத்தவாறே ரூபாயை எடுத்துக் கொடுத்தார். தொன்னூறு ரூபாய் அல்லவா வருகிறது. அவனிடம் சொல்லலமா என்று யோசித்தார். ஆனால் சொல்லவில்லை. அவன் லாபத்தோடுதானே விற்கிறான். நாம்தான் இவ்வளவுக்கு வாங்கி இருக்கிறோமே ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்தது போல் இருக்கட்டுமே.

வீட்டிற்கு வந்து கமலாவிடம் சொன்னார்.

“அந்த ஐந்து ரூபாயைக் கொடுத்திருக்கலாமே. சரி, அடுத்த முறை போகும் போது ஞாபகமாகக் கொடுத்து விடுங்கள்”

இது நடந்து நாலு நாட்களுக்குப் பிறகு, புதிதாகத் திறந்திருக்கும் போத்தீஸுக்குப் போய்விட்டு வரலாம் என்று கிளம்பினார்கள். கடை முழுக்க ஒளி வெள்ளம். எஸ்கலேட்டரில் மேலும் கீழுமாக ஒவ்வொரு மாடிக்கும் போகும் போது ஒரே பிரமிப்பாக இருந்தது.

எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் மற்ற கடையை விட விலை அதிகமாக இருப்பது போல் தோன்றியது. கமலா தேவையென்று எடுத்துக் கொண்ட பொருட்களுக்கு கம்ப்யூட்டரில் பில் போட்டு, பணத்தை கட்டி விட்டு வெளியே வந்தார்கள். வெளியே சாட் அயிட்டங்கள் விற்ற இடத்தில் கூட்டம் மொய்த்தது. எப்படியோ இரண்டு பேல்பூரி வாங்கி வாந்தார் கணேசன்.

“நன்றாக இருக்கிறது. விலைதான் கொஞ்சம் அதிகம்”

“விலையைப் பார்த்தால் முடியுமா. சரி, வாங்க போகலாம்”

வீடு இருக்கும் தெரு முனையின் திருப்பத்தில் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் மேலே கலர் கலராய் குடை விரித்து உள்ளே பேட்டரி லைட் வெளிச்சத்தில் ஒருவன் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தான்.

“ஏங்க, ஐஸ் வாங்கிட்டு வாரீங்களா, நான் முன்னாடி வீட்டுக்குப் போயிடறேன்”

ரோட்டைக் கடந்து, அந்த வண்டிக்காரனிடம், “எவ்வளவு” என்றார்.

“எவ்வளவுக்கு வேணும். இருபத்தைந்து, முப்பது, அம்பது”

“கப் ஐஸா, சாக்கோபாரா”

“எல்லாமே இருக்கிறது. எவ்வளவுக்கு வேணும்”

“சாக்கோபார் எவ்வளவு”

“இருபத்தைந்து”

“சரி, ரெண்டு கொடு”

ஐமபது ரூபாயைக் கொடுத்து விட்டு நான்கு வீடு தள்ளி இருக்கும் தன் வீட்டுக்கு வந்தார்.

ஐஸை சாப்பிட்டு முடித்த பிறகு,

“நல்லா இருக்குங்க. கம்பெனி ஐஸ் போல” என்றாள் கமலா.

“கம்பெனி ஐஸ்தான். நல்ல குவாலிட்டி” என்று சொல்லிவிட்டு, அந்த ஐஸ் வைத்திருந்த அட்டையை எடுத்துப் படித்துப் பார்த்தார். அதிச்சி.

அதில் அதிகபட்ச விலை பதினைந்து ரூபாய் என்று போட்டிருந்தது.

“ஐயய்யோ, பதினைந்து ரூபாய் ஐஸை, இருபத்தைந்து ரூபாய் என்று சொல்லி ஏமாற்றி விட்டானே”

“நீங்க வாங்கும்போது கவனிக்கலையா”

“அங்கே இருட்டாக இருந்தது. பக்கத்தில்தானே, நான் போய் அவனிடம் கேட்டு விட்டு வருகிறேன்”

“வேணாம் விடுங்க. போனாப் போகுது. அன்னிக்கு அந்தக் காய்கறிக் காரனுக்கு ஐந்து ரூபாய் கொடுக்காதது, இப்போ இருபது ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டது. அந்தப் பாவம் தொலைந்தது என்று விடுங்கள்”.

அன்று இரவு முழுக்க கணேசனுக்குத் தூக்கம் வரவில்லை.

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 4

8 ஜன

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 3 தொடர்ச்சி…

சாதாரண ஜலதோஷம் தும்மல்தானே என்று கவனிக்காமல் விட்டது இது போல ஒரு கால்வலியில் அவதிப்படக் காரணமாகி விட்டதே என்று நினைத்துக் கொண்டேன். அப்போது என் நண்பர் பிரகாஷ் ஒரு தகவல் சொன்னார். நியூரோதெரபி என்று ஒரு சிகிச்சை முறை இருக்கிறது என்றும்  அதை முயற்சி செய்து பாருங்களேன் என்றும் சொன்னார்.

அதற்காக அவருக்கு இப்போது நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.  பிறகு அந்த சிகிச்சையை பேற்கொள்ள ஆரம்பித்தேன். நியூரோதெரபியில் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது. மாத்திரை மருந்து பத்தியம் என்று எதுவுமில்லை. அந்த சிகிச்சை அளித்த தெரபிஸ்டுகளில் குமார் என்பவரும் ஒருவர். அவர் வழக்கமான சிகிச்சை தவிர வர்ம யோகா என்று ஒரு யோகப்பயிற்சியையும் கற்றுக்கொடுத்தார்.

அதில் ஒரு விசேஷம் என்னவென்றால் அந்தப்பயிற்சி செய்யும்போது இடையிடையே தண்ணீர் அருந்த வேண்டும். வேறு யோகப்பயிற்சி முறைகளில் தண்ணீர் அருந்துவதில்லை. தனக்கு ஒரு சித்தர் வர்ம யோகாவைக்  கற்றுத்தந்ததாகச் சொன்னார். ஆனால் அந்தப் பயிற்சியின்போது தரையில் அமர்ந்து காலை நீட்டுவதே கடினமாக இருந்தது. ஆனால் வலியுடனேயே அந்தப்  பயிற்சியைத் தொடர்ந்து செய்தேன்.

அதைப் பண்ண ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே வயிறு மற்றும் இடுப்பு பகுதியிலுள்ள தேவையற்ற சதைகள் குறைய ஆரம்பித்தது. கால்வலியும் சரியாகி விட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பயிற்சியையும் குறைத்துக் கொண்டே வந்தேன்.

குமார் அவ்வப்போது விசாரிப்பார். “தினமும் வர்ம யோகா பயிற்சி செய்கிறீர்களா?” என்று.

“ஜலதோஷம் சார், அதனால் நாலு நாளாகப் பண்ணவில்லை” என்பேன்.

“ஏதாவது காரணம் கண்டுபிடித்து விடுகிறீர்கள்” என்பார்.

“ஜலதோஷம் இருப்பதால் இடையில் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அதுதான் காரணம்” என்பேன்.

“வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் கூட போதும்” என்பார். ஆனாலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய நாம் எதையும் தொடர்ந்து முயற்சிப்பதில்லையே . ஒருவிதமான சோம்பேறித்தனம் வந்து விடுகிறது அல்லவா.

கால்வலி குறைந்து விட்டாலும், உடல் எடையும் கொஞ்சம் குறைந்து விட்டாலும் தும்மலும் ஜலதோஷமும் மட்டும் விட்டபாடில்லை. ஒருநாள் ஓய்வாக இருந்தபோது வலைத்தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தேன். அப்பொது ஜலதோஷத்திற்கு இயற்கை வைத்தியம் என்று ஒரு வலைத்தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன்.

அதாவது மஞ்சளையும் வெள்ளை சுண்ணாம்பையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தண்ணீர் விட்டுக் குழப்பினால் ஆரத்தி கலரில் ஒரு கலவை வரும். அதை மூக்கின் மீதும் நெற்றியிலும் தடவி வந்தால் சில மணி நேரத்தில் குணமாகி விடும் என்று அகத்திய முனிவர் ஒரு பாடலில் சொல்லியிருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.

அதில் சொன்னதுபோல் செய்து பார்த்தேன். அந்தக் கலவையை இரவு தூங்குவதற்கு முன் மூக்கிலும் நெற்றியிலும் தடவி விட்டுத் தூங்கினால் காலையில் விழிக்கும்போது நன்றாக குணமாகி இருக்கும். இந்த விஷயம் பற்றி இதே வலைப்பூவில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

அதைப்படிக்க இங்கே சொடுக்கவும்.

இப்பொழுது ஜலதோஷம் பிடிப்பதற்கான அறிகுறி தெரிந்தாலே அந்தக் கலவையை தடவி விட்டுத் தூங்கி விடுவேன். முகத்தில் வேஷம் பொட்டதுபோல் தெரியும். அதனால் இந்த முறை என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இது பழக்கமாகி விடப்போகிறது என்பாள். ஆனாலும் வேறு வழி தெரியவில்லை.

ஒருநாள் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கவுண்டமணி செந்தில் நடித்த கரகாட்டக்காரன் படக்காமடி ஓடிக்கொண்டிருந்தது. “டேய் நாதஸ், போய் ஒரு வெத்திலை பாக்கு வாங்கிட்டு வாடா” என்று செந்திலை கடைக்கு அனுப்புவார் கவுண்டமணி. செந்தில் ஒரு வெற்றிலையும், ஒரு பாக்கும், கூடவே நிறைய சுண்ணாம்பும் கொண்டு வந்து கொடுப்பார். இப்போது பார்த்தாலும் சிரிப்பு வரும் நகைச்சுவைக் காட்சி.

அப்போது அங்கே வந்த என் மனைவி, “இந்த வெற்றிலை பாக்கு போட்டுப்பாருங்களேன். ஜலதோஷத்திற்கு நல்லது என்று யாரோ ‘வாட்ஸ்அப்’பில் எழுதியிருந்தார்கள் என்றாள்.

“வெற்றிலை போடுவதா, விளையாடுகிறாயா. அப்புறம் ஒரு படத்தில் தனுஷ் பெண் பார்க்கப் போகும்போது அருக்காணியாக வரும் ஆர்த்தி வெற்றிலை போட்டு யார் மேலேயோ துப்பி விடுவாரே, அது போல ஆகணும் என்று நினைக்கிறாயா? வெற்றிலை போட்டுக்கொண்டு எப்படி ஆபீஸ் போவது” என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினேன்.

“இரவு சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை போடலாமே” என்றாள்.

“பல்லெல்லாம் சிவப்பாகி விடும். வேண்டாம்” என்றேன். நாம்தான் எதையும் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்வதில்லையே. ஆனால் தொடர்ந்த வற்புறுத்தலினால் வெற்றிலை போட ஆரம்பித்தேன்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒரு சில நாட்களிலேயே ஜலதோஷத்தினால் வரும் தொல்லைகள் குறைய ஆரம்பித்தது. பிறகு இன்னொரு விஷயமும் நடந்தது. இதுவரை பயன்படுத்தி வந்த பேண்ட் எல்லாம் லூசாகி விட்டது. பெல்ட் இல்லாமல் போட முடியவில்லை. இடுப்பளவு குறைந்து உடல் மெலிய ஆரம்பி்த்து விட்டது புரிந்தது.

ஒருவேளை வெற்றிலை போட்டால் எடை குறையுமோ? வெற்றிலைக்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். வெற்றிலை உடல் மெலிவதற்கு உதவுகிறது என்று இந்தியா டுடே வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில் வைட்டமின் ‘சி’ (C)யும் வைட்டமின்கள் B1 (Thiamine), B2 (Riboflavin), B3 (Niacin), மற்றும் வைட்டமின் ‘ஏ’ (A)க்குத் தேவையான கரோட்டினும் (Carotene) இருப்பதாகவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்றும் எழுதப்பட்டு இருந்தது.

அந்த வலைப்பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

மேலும் சுண்ணாம்பு தடவுவதால் உடலுக்குத் தேவையான் கால்சியமும் கிடைக்கிறது, கண் பார்வை தெளிவாகவும் உதவுகிறது. வெற்றிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவு நன்கு ஜீரணமாவதற்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது. அதில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் இல்லாமல் கழிவுகள் வெளியேறவும் உதவுகிறது மேலும் இது போன்ற பலவித பயன்பாடுகளும் அது பற்றிய ஆராய்ச்சியில் தெரிந்தது.

ஒரே ஒரு பிரச்சினை. வெற்றிலை போடுவதால் நாளடைவில் பற்கள் காவி நிறமாகி விடும் என்று தோன்றுகிறது. அதைத் தவிர்ப்பதற்கு நான் ஒரு பற்பசையை உபயோகிக்கிறேன். பற்களை வெண்மையாக்க வேறு பல வழிகளும் இருக்கின்றன.

வேறு சிலர் வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து மென்றால் உடல் எடை குறையும் என்று குறிப்பிடுகிறார்கள். நான் அதை முயற்சி செய்யவில்லை. பற்களின் வெண்மை நிறம் மாறக்கூடாது என்று நினைப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம்.

முக்கியமான விஷயம். வெற்றிலை இளம் பச்சையாக தளிராக இருக்க வேண்டும். வாடி வதங்கிப்போன அல்லது பழுத்து விட்ட வெற்றிலைகளைத் தவிர்த்து விட வேண்டும்.

வெற்றிலை என்பது நமது கலாச்சாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனை சுவாமி வழிபாடுகளிலும், திருமணம் போன்ற முக்கியமான சடங்குகளிலும்  அதை முன்னிலைப் படுத்துகிறோம். நமது முன்னோர்களின் கலாச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

திருமண விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூலம் என்று சொல்லப்படுகிற வெற்றிலை பாக்கு முக்கியப் பங்கு வகிப்பதன் காரணம் இப்போது புரிகிறது.  உலகத்துக்கே நாகரீகம், கலாச்சாரம் போன்றவைகளைக் கற்றுக் கொடுத்த முன்னோடி இனமல்லவா?

நமது முன்னோர்களைப் போற்றுவோம். உடல் நலத்தைப் பாதுகாப்போம்.

முக்கியக் குறிப்பு:-  இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் என்னுடைய சொந்த அனுபவத்தினால் ஏற்பட்ட என்னுடைய அபிப்பிராயம் மட்டுமே. இதன் மூலம் இந்த வழிமுறை எல்லோருக்கும் பொருந்தும் என்று நான் உறுதி கூறவில்லை. இதில் உள்ள சில கருத்துக்களையும், வழிமுறைகளையும் பின்பற்ற நினைத்தால் அது அவரவரது சுயவிருப்பமும் பொறுப்புமாகும். ஆனால் ஒரு சிலருக்காவது இதனால் பயன் கிடைத்தால் அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவ்வளவே!

நிறைவு பெற்றது.

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 1

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 3

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 3

4 ஜன

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2 தொடர்ச்சி…

இப்போது திரிபலா சூரணத்தை நிறுத்தி வெகுநாட்களாகி விட்டது. காரணம் மருந்து என்று நாம் கருதும் பொருட்களை குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டும் பயன்படு்த்தினால் போதும். தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த துணை உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

நிச்சயமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நமது மனதில் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஆழ் மனதில் பதிந்து விட்டால் அந்த பிரக்ஞை எப்போதும் நமக்கு இருக்கும். எளிய வழிகள் சிலவற்றை முயற்சிக்கலாம். Monitor Your Weight போன்ற சில ‘ஆப்’(App)கள் ‘கூகுள் ப்ளே’ யில் கிடைக்கிறது. அதை மொபைலில் நிறுவி நமது எடையை பதிந்து தொடர்ந்து கண்காணித்து வரலாம்.

அது நமது தற்போதைய எடை என்ன? BMI எவ்வளவு? எத்தனை கிலோ குறைய வேண்டும் என்பது போன்ற விபரங்களைக் காட்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இவ்வளவு எடை குறைய வேண்டும் என்று கணக்கீடு செய்து, அவ்வப்போது நமது எடையை பதிவு செய்துகொண்டே வந்தால் கிடைக்கும் முன்னேற்றம் நம் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

கண்களுக்கு ஊட்டம் கொடுக்க வைட்டமின் ‘ஏ’ அவசியம் அல்லவா?. அது சில காய்கறி பழங்களில் கிடைக்கிறது. உலர்ந்த கருப்பு திராட்சையில் Beta Carotene அதிக அளவில் இருக்கிறது என்று ஒரு செய்தியில் படித்தேன். அது கண்களுக்கு நல்லது என்பதால் அதையும் அவ்வப்போது சாப்பிட்டு வந்தேன். ஒரு குறிக்கோளை முன் வைத்து அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?.

250 கிராம் அளவுள்ள தரமான உலர்ந்த கருப்பு திராட்சை 100 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. அதில் பி, சி, ஃபோலிக் ஆசிட் போன்ற வைட்டமின்களும், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் இருப்பதாகவும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். எதையும் அளவோடு சாப்பிட்டால் நல்லதுதான்.

நாம் நினைப்பது அல்லது எதிர்பார்ப்பது எல்லாம் அப்படியே நடந்து விட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் நம்மை அப்படியே திசைதிருப்பி விடக்கூடியவை. சில சமயங்களில் நமது வாழ்க்கையைக்கூட தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். அதனால் விழிப்புணர்வு (Awareness) அவசியம் தேவை.

எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கோ போய்விட்டேன்.

நான் சொல்ல வந்தது, என்னுடைய முயற்சியில் ஏற்பட்ட இன்னொரு திருப்பத்தைப் பற்றி. அதாவது எனக்கு தூசு ஒவ்வாமை (Dust Alergy) உண்டு. சில சமயங்களில் திடீரென்று மூக்கில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டு அது தும்மலாக மாறி பிறகு சிறிது நேரத்தில் மூக்கில் தண்ணீராக கொட்ட ஆரம்பிக்கும். ரொம்பவும் அவஸ்தையாக இருக்கும். காலையில் ஏற்படும் பிரச்சினை சாயங்காலம்தான் ஓரளவு சரியாகும்.

இதற்கு நான் மாத்திரை அல்லது தைலம் போன்ற எதையும் உபயோகிப்பது இல்லை. தும்மல் வரும்போது அதிக சத்தத்துடன் தும்முவேன். பக்கத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். அவ்வளவுதான். மற்றபடி மூக்கடைப்போ அல்லது சுவாசப்பிரச்சினையோ எதுவும் ஏற்படாது. அப்படியே வாழப் பழகிக்கொண்டேன்.

ஆனால் ஒருநாள் அப்படித் தும்மும்போது இடுப்பில் பின்பக்கம் பிடித்துக் கொண்டது. பயங்கரமான வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வலி குறைந்து விட்டதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாளாக ஆக சயாடிக் பெயின் (Sciatic pain) என்று சொல்லப்படும் கால் வலியாக மாறிவிட்டது.

முழங்காலுக்கு கீழே கெண்டைக்கால் பகுதியே மரத்துப் போய் விட்டது. அப்புறம் கொஞ்ச நாளில் நடக்கவே சிரமமாகிவிட்டது. பிறகு எப்படி நடைப்பயிற்சி செய்வது? எப்படி உடற்பயிற்சி செய்வது? உடல் எடையை எப்படிக் குறைப்பது?

ஆரம்பத்தில் டாக்டரிடம் சென்று பல டெஸ்டுகளையும் சிகிச்சைகளையும் செய்தும் பயனில்லை. பிறகு மாத்திரை மருந்து எதுவுமில்லாமல் அதிலிருந்து மீண்டு வர இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியது. அது பெரிய கதை போன்று இருக்கும். அந்த அனுபவத்தை தனியாக எழுத வேண்டும் என்ற உத்தேசம் இருக்கிறது.

இப்பொழுது இந்த விஷயத்தை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அந்த வலியில் நான் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முடியாமல், நிற்க முடியாமல் இரண்டு நாட்கள் அவதிப்பட்டபோதும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்ன போதும் பயந்து விடவில்லை. இது சீக்கிரம் குணமாக வேண்டும், அதற்கு என்ன வழி என்றுதான் யோசித்தேன். ஸ்கேன் செய்யவோ ஆஸ்பத்திரிக்கோ போகவில்லை.

திருவள்ளுவப் பெருந்தகை அறிவுடைமை அதிகாரத்தில் 429 ஆவது திருக்குறளில் சொல்லி இருக்கிறாரல்லவா?

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

அதற்கு

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

என்று பொருள் சொல்லுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.

இதற்கு நான் புரிந்து கொண்ட விளக்கம் என்னவென்றால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனால் விளையப்போவதை உணர்ந்து கொண்டு அதைப் போக்கத் தகுந்த உபாயத்தைக் கண்டு பிடிக்க முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் என்று எதுவும் கிடையாது.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்…

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 1

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2

3 ஜன

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 1 தொடர்ச்சி…

எப்படி சாப்பிடுவது, எப்படி தண்ணீர் குடிப்பது என்று தெரிந்து கொண்டு அதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்று சொன்னேனல்லவா?.

அதாவது, பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்; சாப்பிடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வாயை மூடிக்கொண்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும்; அதனால் உணவு வாயிலேயே நன்றாக அரைபட்டு பின்பு வயிற்றுக்குப் போகும். அது அங்கு எளிதாக ஜீரணிக்கப்படும்.

சாப்பிடும் போதோ, அதற்கு அரை மணி முன்போ அல்லது பின்போ தண்ணீர் குடிக்கக் கூடாது; குளித்த பிறகு குறைந்தது அரை மணி நேரம் கழித்தே உணவருந்த வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருந்தார். அது போன்ற விஷயங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.

மேலும் உணவு நன்றாகச் செரிமானம் ஆகி தேவையற்ற கழிவுகள் வெளியேறினாலே நன்றாக பசியெடுக்கும், உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியம் ஏற்படும் என்றும் ஹீலர் பாஸ்கர் அதில் சொல்லியிருந்தார். அத்தோடு பத்தியம் எதுவுமில்லை என்றும் எதை வேண்டுமானாலும் அளவோடு சாப்பிடலாம் என்றும் சொல்லியிருந்தார்.

எனக்கு இன்னொரு விஷயமும் புரிந்தது. அதாவது மேஜிக் போல திடீரென்று உடல் எடை குறையக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைய வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது என்று.

முக்கியமாக உடல் எடை குறைய முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நினைப்பை நம் மனதின் அடித்தளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவை இல்லாத நேரங்களில் எதையாவது சாப்பிடுவது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க முடியும். குறிப்பாக நொறுக்குத்தீனியை அறவே ஒதுக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் திரிபலா சூரணத்தில் நிறைய நன்மைகள் உள்ளதாக சொல்லியிருந்தார். மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது என்றார் (அது மிகவும் முக்கியமான விஷயமாயிற்றே). நாட்டு மருந்துக் கடையில் திரிபலா சூரணம் என்று கேட்டால் கிடைக்கும் என்றார். அதையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.

இரவு படுக்கப் போகும்போது ஒரு ஸ்பூன் அந்தப் பொடியை வெந்நீரில் கலந்து அத்தோடு கொஞ்சம் தேனையும் கலந்து குடித்து வந்தேன். சிலர் அதை காலையிலும் குடிக்கலாம் என்கிறார்கள். அதில் கடுக்காய்பொடி, நெல்லிக்காய்பொடி மற்றும் தான்றிக்காய்பொடி கலந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல வகைகளில் உதவுகிறது என்று தெரிந்தது. கண் பார்வை தெளிவாகவும் அது உதவும் என்று கேள்விப்பட்டேன்.

ஏனென்றால் நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே கண்களின் பார்க்கும் திறன் குறைகிறது. எழுத்துக்களைப் படிப்பது சிரமாக இருக்கிறது. அதற்கு கண்ணாடி அணிகிறார்கள். கண்ணாடி அணிந்தாலும் பார்வைக் குறைபாடு சரியாவதில்லை. சில வருடங்களில் கண்ணாடியை மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள். அதனால் கண்ணாடி அணியாமல் பார்வைக் குறைபாட்டை சரி செய்ய முடியாதா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திரிபலா சூரணம் அதற்கு உதவும் என்றால் மகிழ்ச்சிதானே.

ஆனால் எதிர்பார்த்தபடி உடனடியாக பலன் எதுவும் தெரியவில்லை. சில நாட்கள் கழித்து ஊருக்குப் போன போது சதுரகிரி மலை அடிவாரத்தில் ஒரு சித்த மருத்துவமனை இருக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றேன். கண்பார்வை தெளிவாக வேண்டும்.

அங்கும் முதலில் எடை பார்த்து குறித்துக் கொண்டார்கள். அசைவம் சாப்பிடக்கூடாது என்றார்கள். நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்றேன். உங்கள் எடை அதிகம். அதனால் முதலில் எடையைக் குறைக்க வேண்டும் என்றார்கள். பிறகு நாடி பார்த்தார்கள். அவர்கள் விசாரித்தபோது ஒன்றரை மாதமாக திரிபலா சூரணம் சாப்பிடுவதைச் சொன்னேன். எங்களது மருந்துகளில் ஒன்றாக நாங்களும் அதைக் கொடுக்கிறோம் என்றார்கள்.

ஆனால் சிகிச்சையைத் தொடங்குமுன் நான்கு நாட்களுக்கு அவர்கள் சொல்வது போல மூலிகை மருந்துகளை கஷாயம் வைத்துக் குடிக்க வேண்டும் என்றும், கஞ்சியும் பழங்களையும் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். ஐந்தாவது நாள் காலையில் பேதி மருந்து சாப்பிட வேண்டும் என்றும் அதன் முடிவில் மோர் குடித்து முடிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதற்கு அடுத்த நாள் திரும்ப இங்கு வந்தால் நாடி பார்த்து பிறகு மருந்து தருவோம் என்றார்கள்.

நான்கு நாட்களுக்கு கஷாயம், கஞ்சி, பழங்கள் மட்டுமே சாப்பாடு. மிகவும் கஷ்டமாக இருந்தது. ஐந்தாவது நாள் பேதி மருந்து சாப்பிட்டேன். ஐந்து நாட்களில் மூன்றரை கிலோ உடல் எடை குறைந்து விட்டது. நான் சென்னையில் இருப்பதால் மறுபடி சதுரகிரி போக முடியவில்லை. பழ உணவுகளை மேலும் சில நாட்கள் தொடர்ந்தேன். பிறகு வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலும் எடை கூடவில்லை. விட்டமின் ‘ஏ’ உள்ள கீரை, காரட் போன்றவைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் கண் பார்வையும் ஓரளவு தெளிவானது.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.